நீக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் வீடுகள் சூறை
தாமோ (மத்திய பிரதேசம்) : கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக எம்பி வீட்டை அக்கட்சி தொண்டர்கள் இன்று காலை சூறையாடினர்.
மத்திய பிரதேசம் தமோ பகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி சந்திரபான்சிங். நடந்தது முடிந்த நம்பி்க்கை வாக்கெடுப்பில் சந்திரபான் சிங் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் தமோவில் அவரது வீட்டுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று காலை 11 மணியளவில் கூடினர். பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் அத்வானியை புகழ்ந்து கோஷமிட்டனர். பின்னர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்த அவர்கள் ஜன்னல் மற்றும் பூச்செடிகளை போட்டு உடைத்தனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த கட்சியினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் எம்பி அல்லது அவரது குடும்பத்தினர் காயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே போல பெங்களூரிலும் பாஜக எம்பி சங்கிலியானாவின் அலுவலகத்தை பாஜகவினர் நேற்று சூறையாடினர். இவரும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டதால் நீக்கப்பட்டுவிட்டார்.
மதசார்பற்ற ஜனதா தளம் எம்பி நீக்கம்:
மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த மதசார்பற்ற ஜனதா தள எம்பி ஷிவண்ணாவும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சிவண்ணா கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதி எம்பி ஆவார்.
கட்சியின் பொதுச் செயலாளர் டானிஷ் அலி கூறுகையில், இன்று காலைதான் அவரை கட்சியிலிருந்த நீக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.
அக்கட்சியின் மற்ற 2 எம்பிக்களான தேவெ கௌடா மற்றும் வீரேந்திர குமார் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு அரசை எதிர்த்து வாக்களித்தனர். மேலும் மாயாவதி தலைமையிலான 3வது அணியில் இக்கட்சி இடம் பெற்றுள்ளது. காங்கிரசையும், பாஜகவையும் விட்டு விலகி நிற்கிறது மதசார்பற்ற ஜனதா தளம்.
பாஜக எம்பிக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு:
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 3 பாஜக எம்பிக்களான மனோரமா மத்வராஜ், சங்க்லியானா மற்றும் மஞ்சுநாத் குன்னுரு ஆகியோரை கட்சி தலைமை நீக்கியது. இதையடுத்து அவர்களுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நீக்கப்பட்ட பாஜக எம்பிக்களுக்காக காங்கிரசின் கதவுகள் திறந்துள்ளன. விரும்பினால் வரவேற்க தயார் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் அறிவிக்கப்படுவார் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications