காங்.-பாஜக 'பயம் கூட்டணி': இடதுசாரிகள் தாக்கு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோற்றால், அந்தப் பெருமை மாயாவதிக்கும், இடதுசாரிகளுக்கும் போய் விடுமே என்ற பயத்தில்தான் மறைமுகமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்து அதை காப்பாற்றியுள்ளது பாஜக என்று இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து சிபிஐ தலைவர்கள் ஏ.பி.பரதன், ஷமீம் பைசி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்திருப்பதன் மூலம் அவர் உலக வங்கியின் முன்னாள் ஊழியர் என்பதை நிரூபித்துள்ளார்.
பாஜகவில் உள்ள சிலர்,ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவோடு, ஆளுங் கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவு தந்துள்ளனர். அரசு கவிழ்ந்தால் அந்தப் பெருமை மாயாவதிக்கும், எங்களுக்கும் கிடைத்து விடுமே என்ற பயம்தான் அதற்குக் காரணம். மாயாவதியை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
தன்னை கொத்தடிமையாக்கப் பார்த்தார்கள் என்று கூறுகிறார் பிரதமர். அப்படியானால், இடதுசாரிகளின் வற்புறுத்தலால் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம், தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம், வன உரிமைச் சட்டம் ஆகியவற்றை அவர் குறை சொல்கிறாரா?.
இதெல்லாம் தேவையில்லாதவை. சர்வதேச நிதி முதலீடுகளும், தொழில் நிறுவனங்களும் இருந்தால் போதும் என்று சொல்ல வருகிறாரா?. அல்லது அவை மட்டும்தான் அவரது அஜெடன்டாவில் உள்ளதா?.
அணு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயலுவதன் மூலம் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு இந்தியாவை அடிமையாக்க பிரதமர்தான் முயலுகிறார். அதற்கு இடதுசாரிகள் பெரும் இடையூறாக இருந்ததால், எங்களை வெளியேற்றத் துடித்தார். தற்போது எல்லா இடையூறுகளும் அவருக்கு நீங்கி விட்டது. இன்மேல் கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சிபிஎம் தலைவர்களான முகம்மது சலீம், பாண்டே ஆகியோர் கூறுகையில், இப்போது முலாயம் சிங்யாதவின் கொத்தடிமையாக மாறியுள்ளாரா என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் நிராகரித்தோம் என்று கூறியிருக்கிறார் பிரதமர். உண்மையில் நாங்கள் அவரை கொத்தடிமையாக வைத்திருக்க விரும்பவில்லை. அவர்தான் பதவியில் நீடித்திருக்க விரும்புகிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக, எல்லாவற்றையும் பிரதமரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் செய்து முடித்து விட்டனர். நம்பிக்கை வாகெடுப்பில் அவர்கள் வென்றிருக்கலாம். ஆனால் நாட்டின் அவ நம்பிக்கையை சம்பாதித்து விட்டனர். இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த இமேஜை ஒரே நாளில் மன்மோகன் சிங் இழந்து விட்டார் என்றார்.
இதேபோல பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் தேவராஜனும் பிரதமரைக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை பிரெஞ்சு தூதர் நேரில் சந்தித்து ஒப்பந்தம் நிறைவேற வழ விடுமாறு வலியுறுத்தினார். அதேபோல அமெரிக்க அரசும் பாஜகவை அரசின் பக்கம் இழுக்க தீவிரமாக முயற்சித்தது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications