'ஆயுதங்கள்'- மதிமுக பிரமுகர் வீட்டில் ரெய்ட்
நெல்லை: ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக யாரோ சிலர் கொடுத்த தகவல்களை நம்பி மதிமுகவின் ஒனறியச் செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் வீடு மற்றும் அலுவலகங்களை போலீசார் சோதனை போட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காமல் வெறும் கையுடன் திரும்பினர்.
மேலப்பாளையம் அருகே உள்ள வீரளப்பெருஞ்செல்வியை சேர்ந்தவர் முத்துகுட்டி பாண்டியன். பாளையங்கோட்டை ஒன்றிய மதி்முக செயலாளரான இவர் தற்போது கருங்குளத்தில் வசித்து வருகிறார். கொடுக்கல், வாங்கல் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில் காலை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் முத்துக்குட்டி பாண்டியன் வீடு, அலுவலகத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் படை ஒன்று மேலப்பாளையம் அம்பை சாலையி்லுள்ள முத்துக்குட்டி பாண்டியன் அலுவலகத்திற்கு விரைந்தது. அங்கு தீவிர சோதனை நடத்திய பின் அவரை அழைத்து கொண்டு கருங்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனையி்ட்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து முத்துகுட்டி பாண்டியன் கூறியதாவது, நான் காலை அலுவலகத்தில் இருந்தேன். அப்போது மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் வந்த போலீசார் அலுவலகத்தை சோதனையிட வேண்டும் என கூறினர். சர்ச் வாரண்ட் இல்லாத நிலையிலும் நான் சம்மதித்தேன்.
சோதனையிட்டு முடிந்ததும் என்னையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். அங்கும் சோதனை போட்டனர். இரு இடங்களிலும் போலீசாருக்கு ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நான் அரசியலில் வளர்ந்து வருவது பிடிக்காமல் யாரோ வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். நான் ஆயுதங்கள் வைத்து அரசியல் நடத்த வில்லை. இந்த அரசியல் சூழ்ச்சியை முறியடிப்பேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
