மதுரையில் முதல்வர் விழா-ரத்து செய்ய அதிமுக வழக்கு
மதுரை: மதுரையில் நாளை நடைபெற உள்ள முன்னாள் அமைச்சர் பழனிவேல்ராஜன் சிலை திறப்பு விழா, சினிமா பாடகர் டிஎம் சவுந்திரராஜனுக்கு பாராட்டு விழாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஜெயவேல். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மதுரையில், ஆகஸ்ட 6ம் தேதி அன்று நத்தம் ரோட்டில் முன்னாள் அமைச்சர் பழனிவேல்ராஜன் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. அதே நாளில் தமுக்கம் மைதானத்தில் சினிமா பாடகர் டிஎம் சவுந்திரராஜனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
இந்த விழாக்களுக்காக பல இடங்களில் திமுகவினர் சாலையை மறித்து குழி தோண்டியுள்ளனர். மின் வாரிய விதிகளுக்கு மாறாக மின்சாரத்தை பயன்படுத்தி வரவேற்பு பலகை, பேனர், கட் அவுட்கள், மின் விளக்கு கோபுரங்கள் வைத்துள்ளனர்.
இது போன்ற தனியார் விழாக்களுக்கு அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த விழாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications