பெற்றோரின் விவாகரத்து சண்டையில் தவிக்கும் 'வாடகை தாய்' சிசு!
ஜெய்ப்பூர்: அன்றுதான் பூத்த புத்தம் புதுமலர் போல் அழகாகக் காட்சி தருகிறது அந்தப் பெண் குழந்தை, தன் பிறப்புக்குப் பின்னால் இருக்கும் சிக்கல்கள் ஏதும் அறியாத நிம்மதியில்.
இந்திய வாடகைத் தாயின் வயிற்றில் பிறந்த ஜப்பானியத் தம்பதிகளின் குழந்தை அது. பிறந்த அன்றே பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.
ஜப்பானை சேர்ந்தவர் யமடா. இவர் ஒரு மருத்துவ நிபுணரும் கூட. இவரது மனைவி குழந்தை பெறும் தன்மை இல்லாமல் தவித்தார்.
எனவே வாடகை தாய் மூலம் அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இந்திய நண்பர் ஒருவர் உதவியுடன் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரை வாடகை தாயாக அமர்த்தி கருத்தரிக்கச் செய்தனர்.
குழந்தை பிறக்கும் நேரத்தில் யமடா தம்பதிகள், குடும்பப் பிரச்சினை காரணமாகப் பிரிந்து விட்டனர். கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.
இதற்கிடையில், அந்த வாடகைத் தாய், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றார். குழந்தை இப்போது மருத்துவனையில் நலமாக இருக்கிறது, வெளியில் அவர்களது பெற்றோர் போடும் சண்டையை அறியாமல்.
குழந்தைப் பிறந்த செய்தி அறிந்ததும் வாங்கிக் கொள்ள டாக்டர் யமடா ஜெய்ப்பூர் வந்தார். மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்துச் செல்ல அவர் முயன்ற போது டாக்டர்கள் மறுத்துவிட்டார்களாம்.
காரணம் விவாகரத்து பெற்ற தம்பதியரில் கணவர் மட்டுமே தனியாக ஒரு குழந்தையைப் பெற்றுச் செல்வதை இந்திய சட்டம் அனுமதிப்பதில்லை. இதனை இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் யமடாவுக்கு விளக்கினர்.
உடனே டோக்கியோவில் உள்ள தனது முன்னாள் மனைவியை அணுகி, குழந்தையை வாங்கி தன்னிடம் ஒப்படைத்துவிட்டால் போதும் எனக் கோரிக்கை விடுத்தாராம். ஆனால் அந்தப் பெண்மணி அதற்கு ஒப்புக் கொள்ளாததோடு, குழந்தையைப் பார்க்கக் கூட வர மறுத்துவிட்டாராம்.
சட்டப் பிரச்சினையை சமாளித்து, குழந்தையை வாங்கிக்கொண்டு ஜப்பானுக்கு எடுத்துச் செல்ல தனது இந்திய நண்பர் ஒருவர் மூலம் யமடா முயன்று வருகிறார். அரசிடம் தடை இல்லா சான்று பெறவும், குழந்தைக்கு முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து ஜப்பானுக்கு அழைத்துச் செல்லவும் யமடா ஜெய்ப்பூரில் தங்கி முயன்று வருகிறார்.
தனது நிலையை விளக்கி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் ஒரு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளார் யமடா.
இந்தச் சட்டச் சிக்கல்கள் தீருமா... பச்சிளம் சிசு தன் தாய் நாடு திரும்ப இந்திய அரசு தன் சட்டங்களைத் தளர்த்துமா... பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications