ஓகேனக்கல்: கருணாநிதிக்கு சரத் அட்வைஸ்!
சென்னை: தமிழகத்தின் சட்டப்பூர்வமான, நியாயமான உரிமையை விட்டுத் தர மாட்டோம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி உடனடியாக கடிதம் எழுத வேண்டும். நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கான ஒப்புதலை நிறுத்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் அவர் கூறும்போது, தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. ஒரு அலுவலகம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான் என்று கூறியிருக்கிறார். இது நமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
பல ஆண்டுகாலமாக காவிரி பிரச்சனையில் தமிழக நலனை மதிக்காமல் கர்நாடக அரசு மெத்தனமாக இருந்து வருவதை பார்க்கும்போது, ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கும் தடையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறுக்க வேண்டும் என்று கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம் நம் சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் சில ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இப்போதும் மேட்டூர் அணையின் நீர் அளவு அதிகரிப்பதற்கு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையே காரணம்.
கர்நாடகத்தில் ஆட்சி மாறியதும் அந்த அரசோடு கலந்து பேசி ஓகேனக்கல் திட்டப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தினோம். ஆனால் திட்ட செயல்பாடுகள் குறித்த கால அட்டவணையை மட்டும் அவர் வெளியிட்டார்.
இந்த அட்டவணைப்படி பணிகள் நடைபெறுகின்றனவா? ஓகேனக்கல் திட்டத்துக்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு முதல்வர் கருணாநிதி என்ன பதில் சொல்ல போகிறாரா?
கர்நாடக அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கக் கூடாது, தமிழகத்தின் சட்டப்பூர்வமான, நியாயமான உரிமையை விட்டுத் தர மாட்டோம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி உடனடியாக கடிதம் எழுத வேண்டும். பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். ஓகேனக்கல் திட்டப்பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.
இத்திட்டம் நிறைவேற தடை ஏற்படுமானால் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகி அவர்களின் வாழ்வு மலர இறுதி வரை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போராடும் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார் சரத்.












Click it and Unblock the Notifications