காமராஜர் ஆட்சி வராது - தங்கபாலு ஆதரவாளர்கள் அதிருப்தி
சென்னை: ஆளாளுக்கு தனித்தனியாகக் கூட்டம் நடத்தினால், 50 ஆண்டுகள் ஆனாலும் காமராஜர் ஆட்சி அமையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் சத்திய மூர்த்திபவனில் வெள்ளையனே வெளியேறு பிரகடன நாள் கருத்தரங்கு நடந்தது. அதே சமயத்தில் முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி ராயப்பேட்டையிலும், அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் திருவான்மியூரிலும் தனித்தனியே நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இது தங்கபாலு ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமை பொறுப்பை தங்கபாலு ஏற்ற உடன், கட்சியை பலப்படுத்துவேன், கோஷ்டி பூசலை களைய முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கருத்தரங்கில் கோஷ்டி பூசல் அரங்கேறியதால் தங்கபாலு கோஷ்டியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இரா.அன்பரசு கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என்றால் கட்சியில் ஒற்றுமை அவசியம். அதற்கு தங்கபாலு தலைமையில் ஒருமுகமாக செயல்பட வேண்டும். அதற்காகத்தான் சோனியா அவரை தமிழக தலைவராக நியமித்தார்.
இங்கே கருத்தரங்கு நடக்கும் அதே நேரத்தில் நான் ஒரு கூட்டம், நீ ஒரு கூட்டம் என்று நடத்துவது தேவையா. இப்படி தனித்தனியாக கடை விரித்தால் நிச்சயமாக இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமையாது.
காந்திக்கும் காமராஜருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒற்றுமையாக இருந்தார்கள். அந்த உணர்வை அனைவரும் பெற வேண்டும். அதைத்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் கற்றுக் கொடுக்கிறது என்றார் ஆவேசமாக.
முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கூறுகையில், சுதந்திர போராட்ட நிகழ்வுகளை சிறு சிறு புத்தகங்களாக அச்சடித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வழங்க வேண்டும். அப்படி செய்தால் காந்திய தத்துவம் நிலை பெறும். காமராஜர் ஆட்சியும் தமிழகத்தில் மலரும் என்றார்.
சட்டசபை காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா கூறுகையில், கட்சித் தலைமை மாற்றப்பட்ட உடனையே கட்சித் தொண்டர்கள் வேகமாகவும் விறுவிறுப்புடனும் செயல்பட தொடங்கியுள்ளனர். இடையில் ஏற்பட்ட சோர்வை போக்க தங்கபாலு அருமருந்தாக இருப்பார்.
ஆளுக்கொரு கூட்டம் போடுகிறார்கள். அவர்கள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் அங்கும் தங்கபாலு தோன்றுவார். விறுப்பு வெறுப்பு பற்றி அவர் கவலைப்படவில்லை. கட்சியை ஒற்றுமை படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications