ரவுடிகளை அரசியல்வாதிகள் ஆதரிக்க கூடாது-சிபிஐ
தஞ்சை: சமூக விரோதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு தரக்கூடாது. கட்சியிலும் அவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டின் கூறியுள்ளார்.
திருத்துறைப்பூண்டி நீதிமன்ற வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராமலிங்கத்தை சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமூக விரோதிகள் சட்டத்திற்கு அஞ்சாமால் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தாக்கப்படுவது இது நான்காவது சம்பவம்.
கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் படுகொலை மற்றும் தாக்குதல் குறித்து முதல்வர் கருணாநிதி மற்றும் காவல் துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். முதல்வர் எச்சரித்தப் பின்னரும் சமூக விரோதிகள் அரசியல்வாதிகளின் பாதுகாப்பில் இருந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள், போலீஸ் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மாற்றிவிட்டது. சமூக விரோதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு தரக்கூடாது. கட்சியிலும் இடமளிக்கக் கூடாது. அப்போதுதான் மக்கள் நம்புவார்கள்.
மத்திய அரசு எரி பொருள் விலையை குறைக்கவில்லை. பன்னாட்டு நிறுவங்களுடன் இந்திய அரசு கூட்டு வைத்து கொள்ளையடிக்கிறது. தமிழக அரசு அனைத்து துறைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுகிறது.
தேர்தல்-கூட்டணி:
தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி குறித்து அறிவிப்போம். மத்திய அரசின் தவறான கொள்கையால் விலைவாசி உயர்கிறது. மதவாத கட்சியான பாஜவுடனும், அணு ஒப்பந்தத்தை ஏற்ற காங்கிரஸூடனும் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications