என்கேகேபி ராஜா திமுகவுக்கு முழுக்கு?-பாஜகவுக்கு தாவல்?
ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த என்.கே.கே.பி. ராஜா திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேரப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் திமுக செயலாளர் பதவியை தக்க வைக்க முயற்சித்து வருவதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது ஆள் கடத்தல் புகார், சொத்து பறிப்பு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பெருந்துறையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், தனது உறவினரான பழனிச்சாமி-மலர்விழி ஆகியோரையும், அவர்களது மகனையும் ராஜா கடத்தி வைத்துள்ளதாகவும், சொத்துக்களைப் பறிக்க முயற்சித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நேரில் ஆஜராகி உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர் பழனிச்சாமி தம்பதியினர்.
அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது நடந்த சில நாட்களில் பழனிச்சாமியின் மகன் சிவபாலன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து, நான் அமைச்சரின் கஸ்டடியில் சுதந்திரமாக உள்ளேன் என்றார்.
இதுதான் ராஜாவுக்கு வினையானது. அமைச்சரின் கஸ்டடியில் தான் இருப்பதாக சிவபாலனே கூறியதால் ராஜாவின் பதவியை முதல்வர் கருணாநிதி பறித்து உத்தரவிட்டார். இருப்பினும் ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து அவர் நீடித்து வருகிறார்.
இந்தநிலையில், டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் அதிருப்தியில் இருக்கும் ராஜா, தனது 2வது மனைவி உமாவின் உறவினர்கள் மூலமாக பாஜகவில் இணைய முயற்சிப்பதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
ஆனால் ஈரோடு வட்டார திமுகவில் வேறு மாதிரியாக கூறுகிறார்கள். அமைச்சர் பதவியை இழந்தாலும் கூட, மாவட்ட செயலாளர் பதவியையாவது தக்க வைத்துக் கொள்ள ராஜா முயன்று வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications