மாவட்டந்தோறும் சித்த மருத்துவ கல்லூரி-கோரிக்கை
தஞ்சாவூர்: மாவட்டம் தோறும் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில சித்த மருத்துவக் கழகத்தின் இரண்டு நாட்கள் வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு இந்த அமைப்பின் மாநில தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.
மாநாட்டை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. இரண்டாம் நாள் வெள்ளி விழா மாநாட்டு பேரணியை டாக்டர் பா.சு.மணி தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மாநாடு நடக்கும் இடத்தை சென்றடைந்தது. வெள்ளி விழா மாநாட்டு மலரை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன் வெளியிட்டார்.
அனைத்து வகை நோய்கள் பிரிவு கொண்ட சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும், சித்த மருந்துகளுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும், மாவட்டம் தோறும் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், சித்த மருத்துவர்களுக்கு மாத ஓய்வூதியத்தை ரூ.2,000ஆக உயர்த்தித் தரவேண்டும், சித்த மருத்துவர்களுக்கு பஸ் மற்றும் ரயிலில் 75 சதவீத கட்டணச் சலுகை வழங்க வேண்டும் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications