ஒன்றுபட்டு தீவிரவாதத்தை ஒழிப்போம்-பிரதமர்

இந்தியாவின் 62வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் உள்ள கொத்தளத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரையாற்றினார்.
பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள் ...
பெங்களூர், அகமதாபாத் வெடிகுண்டுச் சம்பவங்கள் நமக்கு விடுக்கப்பட்ட சவால்கள். இந்த சவால்களை நாம் வெற்றிகரமாக சந்தித்துமீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் இதற்கு ஒற்றுமை அவசியம், கடினமான ஒத்துழைப்பு அவசியம். எந்தவித முரண்பாடும் இல்லாத அரசியல் முக்கியம். இது பல்வேறு சமுதாயங்களுக்கிடையிலான பேச்சுக்கள், சுமூகத்தன்மையினால் மட்டுமே உருவாக முடியும். அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
பிளவுபட்ட கருத்துக்களால் தீவிரவாத அச்சுறுத்தலை நாம் ஒழிக்க முடியாது.
தீவிரவாத தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடாகும். தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களை மறுசீரமைக்க மத்திய அரசு உதவும்.
நாட்டின் உளவுப் பிரிவு, காவல்துறை, பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்படும். ஆய்வுக்குட்படுத்தப்படும். தீவிரவாதம், மதவாதம், அடிப்படைவாத சவால்களைசந்திக்கும் வகையில் அவர்கள் பலப்படுத்தப்படுவர். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் இது மிகப் பெரிய சவாலாகும்.
இந்த சவாலை சந்திக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இதற்குத் தேவையான படையினர் சேர்க்கப்படுவர். இந்த சவாலை சந்திப்பில் அரசு உறுதியாக உள்ளது.
இந்த விஷயத்தில் அனைத்து மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மத தலைவர்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தீவிரவாதத்ைத வேரறுக்கும் அரசின் முயற்சியில் ஒன்றுபட வேண்டும்.
தீவிரவாதம், மதவாதம், அடிப்படைவாதத்திற்கு எதிரான போரில் பிளவு ஏற்பட்டால் நிச்சயம் வெற்றிகிடைக்காது. ஒன்றுபட்ட சூழல் உருவானால்தான் இந்த சவாலை நாம் வெற்றிகரமாக சமாளிக்க முடியும்.
இதேபோல பொருளாதார நவீனமயமாக்கம், சமூக வளர்ச்சி ஆகியவற்றிலும் நாம் ஒன்றுபட்டால்தான் வெற்றி கிடைக்கும்.
ஊரக இந்தியாவின் வளர்ச்சி
கடந்த நான்கு ஆண்டுகளில், விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிக் கடன்களுக்கான வட்டிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
கோதுமை கொள்முதலை 50 சதவீதம் அரசு உயர்த்தியுள்ளது. நெல் கொள்முதல் 30 சதவீதம் உர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளின் பொருளாதார நிலை வெகுவாக உயர்ந்துள்ளது.
அரிசி, கோதுமை, உணவுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்க தேசிய உணவுப் பாதுகாப்பு மிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, மழை பாங்கான பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள், உணவு மேலாண்மை ஆகியவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் முதலீடுகளை அதிகக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் கடன் சுமை வெகுவாக குறைந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த விவசாய பொருளாதாரமும் உயர்ந்துள்ளது.
1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு விவசாய முதலீடுகள் குறைந்து காணப்பட்டன. தற்போது அது அதிகரித்துள்ளது. ஊரக இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. 2007-08ம் ஆண்டில் பருத்தி, சர்க்கரை, உணவு தானியங்களின் உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது.
நமது விவசாயிகளின் வாழ்க்கையில் மீண்டும் பசுமை மலர்ந்துள்ளது. நமது கிட்டங்கிகள் நிரம்பி வழிகின்றன. நமது விவசாயிகள் நம்பிக்கையான, வளமான எதிர்காலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அமர்நாத் ..
புனிதமான அமர்நாத் ஆலயம் அனைத்து இந்தியர்களையும் ஒற்றுமைப் பாதையில் நடை போட வைக்கிறது. நமது மதச்சார்பற்ற பாரம்பரியத்திற்கு அமர்நாத் ஆலயம் மிகச் சிறந்த உதாரணம். இங்கு இந்துக்களை பரம்பரை பரம்பரையாக முஸ்லீம் சகோதரர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.
அமர்நாத் தொடர்பான விவகாரங்களில் சுமூகமான மன நிலையுடனும், நல்லெண்ணத்துடனும், அமைதியான சூழலிலும்தான் நல்ல தீர்வை காண முடியும்.
மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்போர் இந்தப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி விடுகிறார்கள். இவர்களால் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமர்நாத் நில விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் அரசுடன் ஒத்துழைத்து அமைதி திரும்ப உதவ வேண்டும்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தைகள்தான் மிகச் சிறந்த தீர்வு என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications