கிராம மக்களுடன் விடுதலை சிறுத்தை தொண்டர்கள் மோதல்
கல்பாக்கம்: காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே குடிபோதையில், கிராம மக்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 47வது பிறந்த நாளையொட்டி சென்னை தீவுத் திடலில் நேற்று பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் சென்னைக்கு வாகனங்களில் வந்தனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் 2 வேன்களில் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக சென்னைக்கு வந்தனர். வழியில் கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டணம் என்ற இடத்தில் சாலையோர பிரியாணிக் கடையில் சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டு முடித்ததும் காசு கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் காசு கேட்கவே அவருடன் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். இதில் ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டார்.
இதையடுத்து ஹோட்டல் பணியாளர்கள், சாப்பிட வந்தவர்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர்களான பாஷா, ரசூல் மற்றும் ஊழியர்கள் நசீர், அலால், காஜா ஆகியோரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கத்தியால் குத்தியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் வசிப்போர், கிராம மக்கள் ஒன்று திரண்டு சிறுத்தைகள் கட்சியின் வேன்களை மறித்தனர். இரு வேன்களையும் கல் வீசித் தாக்கினர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் வேன்களை நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கத் தொடங்கினர். கிராம மக்களுடனும் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதில் ஒரு அரசு பஸ்ஸும் அடங்கும்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கலைந்து போகக் கூறினர். ஆனால் அவர்கள் போலீஸாரையும் அடிக்கத் தொடங்கினர்.
கூவத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்பர் வில்சனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நெஞ்சில் தாக்கினர். ஏட்டு வேல் முருகன் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டார். முகத்திலும் அடி விழுந்ததில் அவருக்கு ரத்தம் கொட்டியது.
மேலும் பொதுமக்கள் தரப்பில் 15 பேர் காயமடைந்தனர். நிலவரம் மோசமாகவே போலீஸார் தடியடி நடத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அடித்து விரட்டினர். அதன் பின்னரே நிலைமை சுமூகமானது. இந்த மோதல் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications