ரேஷன் கார்டு தாமதம்: தேனி கலெக்டர்-அதிகாரிக்கு அபராதம்
தேனி: ரேஷன் கார்டு தாமதமாக வழங்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரூ.29,000, அபராதமாக வழங்க, தேனி மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (71). இவர் கணவர் இறந்து போனதால் தனியாக வாழ்ந்து வருகிறார். பழைய ரேஷன் கார்டை ஒப்படைத்து புதிய ரேஷன்கார்டு வேண்டி தாலுக்கா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதைனையடுத்து 29.04.2007ம் தேதி தகவல் உரிமை அறியும் சட்டப்படி மனு செய்தார். அதற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து 06.02.2008 அன்று தேனி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மாவட்ட கலெக்டர், மாவட்ட வழங்கல் அதிகாரி, ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 18ம் தேதி பேச்சியம்மாளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் மன உளைச்சலுக்காக ரூ.10,000, சேவை குறைபாட்டிற்காக ரூ.14,000, வழக்கு செலவுக்காக ரூ.5,000, ஆக மொத்தம் ரூ.29,000த்தை பனிரெண்டு சதவீத வட்டியுடன் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தொகையை மாவட்ட கலெக்டர், மாவட்ட வழங்கல் அதிகாரி, தாலுக்கா வழங்கல் அதிகாரி ஆகியோர் இணைந்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications