20 பேர் பார்வை பாதிப்பு-காரணம்: கெட்டுப் போன சொட்டு மருந்து
சென்னை: இலவச காட்ராக்ட் அறுவைச் சிகிச்சையால் 20 விவசாயத் தொழிலாளர்களின் பார்வை பறிபோயுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திருச்சி விரைந்துள்ளார். அங்கு அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்ட மருத்துவமனையில் அவர் விசாரணை நடத்துகிறார்.
விழுப்புரம் மாவட்டம் தொழுவந்தாங்கல், அத்தியூர், கண்ணன்காடு, அரூர், பாக்கம், உலகுடையான்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களுக்காக கடுவனூர் கிராமத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
பெரம்பலூரைச் சேர்ந்த ஜோசப் கண் மருத்துவமனையும், இந்திய பார்வைக் குறைபாடு தடுப்புக் கழகமும் இணைந்து இதை நடத்தின.
65 வயதுக்கு மேற்பட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். இவர்களில் 29 பேருக்கு கண் புரை எனப்படும் காட்ராக்ட் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையில் ஜூலை 29ம் தேதி அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1ம் தேதி அனைவரும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடு திரும்பிய சில நாட்களில் இவர்களுக்கு வாந்தியும், கடுமையான வலியும், கண் பாதிப்பும் ஏற்பட்டது. பார்வை மங்க ஆரம்பித்தது. இதையடுத்து கடுவனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் கருணாநிதி, ரோட்டரி கிளப்பை அணுகினார். அவர்கள் கோவை சங்கரா மருத்துவமனையிலிருந்து டாக்டர்களை வரவழைத்தனர்.
டாக்டர்கள் நடத்திய முதல் கட்டப் பரிசோதனையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தனர். அவர்களுக்கு எங்கு அறுவைச் சிகிச்சை நடந்ததோ அந்த மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஜோசப் கண் மருத்துவமனைக்கு அவர்களை ஊர் மக்கள் கொண்டு சென்றனர். பின்னர் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனைவரும் மாற்றப்பட்டனர். அங்கு 29 பேருக்கும் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.
கெட்டுப் போன சொட்டு மருந்து:
அங்கு, அறுவைச் சிகிச்சைக்குள்ளான 29 பேருக்கும் அறுவைச் சிகிச்சையின்போது கெட்டுப் போன கண் சொட்டு மருந்துகள் தரப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே கண் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தரமான சிகிச்சை தர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
8 பேர் பார்வை பறிபோனது:
இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் 29 பேரையும் திருச்சியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனைக்கு மாற்றி அங்கு தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே 8 பேருக்கு முழுமையாக பார்வை போய் விட்டதாக கூறப்படுகிறது. 21 பேருக்கு பாதி பார்வைதான் இருக்கிறதாம். மற்றவர்களுக்கும் கண் பார்வை மங்கி வருகிறதாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் மேஷ்ராம் கூறுகையில், அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்தவுடன்தான் எத்தனை பேருக்கு பார்வை மீண்டும் வரும் என்பது தெரிய வரும்.
இந்த விவகாரம் குறித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை டீன் பாலசுப்ரமணியன் தலைமையிலான டாக்டர் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்குள் இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 26ம் தேதி மாலைக்குள் அறிக்கை வந்து விடும். அதன் பின்னர் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பன்னீர் செல்வம் விரைந்தார்:
இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திருச்சி விரைந்துள்ளார்.முதல்வர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் விரைந்திருப்பதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமியும், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
மருத்துவமனை மீது கல்வீச்சு:
இந்த நிலையில், பெரம்பலூரில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக 10 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.
நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையிலான 10 பேர் நேற்று அந்த மருத்துவமனைக்கு வந்தனர். கண் பார்வையைப் பறிக்க காரணமான மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் மருத்துவமனை மீது திடீரென கல்வீச்சில்இறங்கினர்.
இதில் நுழைவாயில் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி 10 பேர் மீதும் புகார் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications