ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்ட சர்தாரி-கூட்டணிக்கு திரும்ப அழைப்பு
இஸ்லாமாபாத்: ஆளும் கூட்டணியிலிருந்து விலகியுள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப்பிடிம் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி சர்தாரி மன்னிப்பு கேட்டுள்ளார். மீண்டும் கூட்டமியில் இணைய வேண்டும் எனவும் ஷெரீப்புக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று ஷெரீப் கோரி வந்தார். ஆனால் அதை ஏற்பதில் சர்தாரி தாமதம் காட்டி வந்தார். இந்த நிலையில் தடாலடியாக அதிபர் தேர்தல் வேட்பாளராக சர்தாரி அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஷெரீப் நேற்று ஆளும் கூட்டணியிலிருந்து விலகி விட்டார். மேலும் அதிபர் தேர்தலிலும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
இதனால் சர்தாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ள அவர் மீண்டும் அவர் கூட்டணிக்குத் திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிடிவி மூலம் அவர் சார்பில் ஒளிபரப்பான உரையில், பெனாசிர் பூட்டோவுடனும், நவாஸ் ஷெரீப்புடனும் நான் தொடங்கிய ஜனநாயகப் பயணம் தோல்வி அடைந்திருப்பது என்னை வருத்தமடைய வைத்துள்ளது.
நாங்கள் இணைந்து சில வெற்றிகளைப் பெற்றோம். இருவரும் இணைந்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுத்தோம். ஒரு சர்வாதிகாரியை வீழ்த்தினோம்.
இப்போது எங்களது பயணத்திலிருந்து ஷெரீப் விலகியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மீண்டும் அவர் எங்களோடு இணைய வேண்டும்.
ஷெரீப்பின் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன். சொந்த கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு, நாட்டின் நலன் கருதி மீண்டும் கூட்டணிக்கு அவர் திரும்ப வேண்டும்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்ைத ஏற்படுத்தினோம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அதிலிருந்து நாங்கள் விலகவில்லை. சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.
முஷாரப்பை பதவியிலிருந்து நீக்க பாகிஸ்தானிலும், வெளிநாடுகள் சிலவற்றிடமிருந்தும் நாம் உதவிகளைப் பெற்றோம். அந்த ஊக்கத்துடன் நாம் அனைவரும் இணைந்து முஷாரப்பை வீழ்த்தினோம். அதன் பின்னர் நாம் எப்படி அடியெடுத்து வைக்கப் போகிறோம் என்ற பரீட்சை தற்போது வந்துள்ளது. இதை நாம் அனைவரும் சேர்ந்துதான் சந்திக்க வேண்டும்.
எனவே ஷெரீப் மீண்டும் கூட்டணிக்குத் திரும்புவார், வலிமையான, புதிய பாகிஸ்தானை உருவாக்க உதவுவார் என்று நம்புகிறேன்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முஸ்லீம் லீக் தலைமையிலான கூட்டணி அரசுக்கு நாங்கள் எந்த தொந்தரவும் தர மாட்டோம் என்றார் அவர்.
சர்தாரி, நவாஸ் வேட்பாளர் வேட்பு மனு:
இதற்கிடையே அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஆசிப் அலி சர்தாரி, நவாஸ் ஷெரீப் கட்சியின் வேட்பாளர் சயீத் உஸ் ஸமான் சித்திக்கி, முஷாரப் கட்சியின் வேட்பாளர் முஷாஹித் ஹூசேன் சயத் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
3 பேரும் தலைமை தேர்தல் ஆணையர் குவாஸி முகம்மது பரூக்கிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவர்களுடன் அவரவர் கட்சிகளின் மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
செப்டம்பர் 6ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications