கரூர்-திருச்சியில் மணல் கொள்ளை: காங். போராட்டம்
திருச்சி: திருச்சி, கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை கண்டித்து திருச்சியில் வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி ஆற்றின் தென்பகுதியில் மணல் அள்ளுவதற்காக, கரூர் மாவட்டம் மாயனூரில், கட்டளை கால்வாய் முதல் முசிறி வரையுள்ள அகன்ற காவிரி நடுவே இருபது அடி உயர மணல் கொண்டு அணை அமைத்து தென் பகுதியில் இருந்து வட பகுதிக்கு தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர்.
இதனால் காவிரி நதியின் போக்கு மாறியுள்ளது. கூடுதலாக மழை பெய்தால் காடுவெட்டி, மணல்மேடு, காரைக்காடு, ராமசமுத்திரம், அரசலூர், வரதராஜபுரம், சீனிவாசநல்லூர், திருநாராயணபுரம், முள்ளிப்பாடி போன்ற கிராமங்கள் வெள்ள அபாயத்தை சந்திக்கின்றன.
இதுகுறித்த புகைப்பட ஆதாரங்களோடு தமிழக அரசுக்கு பல முறை புகார் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கை இல்லை. திருச்சி மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். அதிகாரிகளின் இது போன்ற தவறுகள் தொடர்ந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி பாதிக்கும்.
இது பற்றிய முழு உண்மையையும் சட்டமன்றக் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனிடம் தெரிவித்துள்ளோம். தற்போது திருச்சியில் போராட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளோம்.
திருச்சி, கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் ரூ.626 செலுத்தி விட்டு ஒரு லாரிக்கு இரண்டு யூனிட் மணல் அள்ள குத்தகைதாருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மணல் குவாரியில் மூன்றாவது நபர் (கரூர் திமுக பிரமுகர்) ஒருவர் மூலம் ஒரு லாரிக்கு மேலும் ரூ.1,200 வசூல் செய்யப்பட்டு, ஒரு லாரியில் 4 யூனிட் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது.
இது தவிர அரசின் தடையை மீறி டாராஸ் லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. திருச்சி, கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து தினமும் 2,500 லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அரசு கணக்கில் வெறும் 1000 லாரிகள் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது. இதனால் மாதம் வீதம் ரூ.10 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய விவரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி உடனடியாக தலையிட்டு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதில் தொடர்புடையவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அடுத்த மாதம் 10ம் தேதி திருச்சி பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications