மின்வெட்டு: கோவையில் விஜய்காந்த் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தருவோம் என்று கூறிய திமுக அரசு இன்று இருண்ட காலத்தை மட்டுமே தந்திருக்கிறது. இதைக் கண்டித்து வரும் 7ம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரில் தினம் ஒன்றரை மணி நேரம், புறநகரங்களில் 3 மணி நேரம், மற்ற மாவட்டங்களில் 5 மணி நேரம் என அதிகாரப்பூர்வமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளை பொறுத்தவரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பகலில் மட்டும் இந்த மின்வெட்டு இப்பொழுது இரவிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சாவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், தொழில்கள் முடங்கி முற்றிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கும் தொழில் நிறுவனங்கள்,
வேலை இழந்து வறுமையில் வாடும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பாடங்களை படிக்க முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகள், குறிப்பிட்ட நேரத்தில் சமையல் வேலைகளை முடிக்க முடியாமல் திண்டாடும் தாய்மார்கள்,
தனியார் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவமனைகள் என ஒட்டுமொத்த தமிழகமே இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 9,567 மெகாவாட். இதில் 6,048 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகிறது என்று அறிகிறோம். 3,500 மெகாவாட்டுக்கு மேல் பற்றாக்குறை உள்ளது. இதை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை.
கடந்த காலத்தில் ஒரு சிறு அளவே மின்வெட்டு அமலில் இருந்தது. அதை ஜெனரேட்டர்கள் மூலம் சமாளித்தனர்.
ஆனால், இன்று மின்சாரம் தருவதில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை தனியார் நிறுவனஙகள் ஜெனரேட்டர்கள் மூலம் கூட சமாளிக்க முடியாது. ஏனெனில் அதற்கு தேவையான டீசலுக்கும் பற்றாக்குறை.
தாங்கமுடியாத இந்த மின்வெட்டை கண்டித்து எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் மக்களே தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால நலனைக் கருதி இந்த அரசுகள் திட்டங்களை தீட்டவில்லை.
இன்றைக்கு மின் உற்பத்தி தொடர்பாக திட்டங்களை தீட்டினாலும் பலன் கிடைப்பதற்கு 4 ஆண்டுகளாகும்.
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்தத் துறையும் இயங்க முடியாது. ஆகவே இன்றைய மின்சார நெருக்கடி, தமிழ்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும்.
தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தருவோம் என்று பேசிவிட்டு தமிழக மக்களுக்கு இன்று திமுக அரசு இருண்ட காலத்தை மட்டுமே தந்திருக்கிறது.
இந்த அரசை கண்டித்து மக்களின் துயரங்களில் பங்குகொள்ளும் வகையில் தேமுதிக சார்பில் வரும் 7ம் தேதி கோவையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இந்த அரசு தேவையா?-பிரேமலதா:
இதற்கிடையே விழுப்புரத்தில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய தொடக்க விழா நடந்தது. இதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில்,
மின்சாரம் இல்லை என்று சொல்வதற்கு ஒரு அரசு தேவையா? தமிழகத்தில் சாலை, மருத்துவம், மின்சார வசதிகள் உள்பட எந்த வசதியும் இல்லை. ஓட்டுப் போடும்போது மக்கள் சிந்தித்து ஓட்டுப் போட வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். குடிநீர் பிரச்சனை ஏற்பட்டபோது, சொந்த செலவில் 10 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கினோம்.
தமிழக அரசின் கவர்ச்சித் திட்டங்களால் யாருக்கும் பயனில்லை. இலவச டிவி வழங்குவதால் யாருக்கு லாபம்?. ஏழைகளுக்கு இலவசமாக நிலம் வழங்குவோம் என்றனர். ஆனால் அரசியல்வாதிகளே நிலத்தை அபகரித்துக் கொள்கின்றனர்.
இலங்கையில் மக்கள் அமைதியாக வாழும்வரை பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். நாம் அவரது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுகிறோம். இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக தேமுதிக உள்ளது. தமிழகத்தை முதலிடத்திற்கு முன்னேற்ற பல திட்டங்களை வைத்துள்ளோம்.
தமிழகத்தில் எத்தனை கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக இங்கே, அங்கே என்று 6 மாதத்துக்கு ஒரு முறை அணி மாறுகின்றன. ஆனால் மக்களை மட்டுமே பக்க பலமாக கொண்டு தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம்.
நெசவாளர் பிரச்சனைக்கு பலர் கஞ்சித் தொட்டி திறந்தனர். ஆனால் ரூ.10 லட்சத்துக்கு அவர்களிடம் இருந்து துணிகளை வாங்கி ஏழைகளுக்கு வழங்கினோம் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications