பாதுகாப்பில்லாத சரவணா ஸ்டோர்ஸ் இடிக்கப்படுமா?
{image-Saravana Stores250_04092008.jpg tamil.oneindia.com}சென்னை: பெரும் தீவிபத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையை மொத்தமாக இடித்துத் தள்ள வேண்டும் என ரங்கநாதன் தெருவில் உள்ள கடை வியாபாரிகள் காவல்துறைக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சரவணா ஸ்டோர்ஸ் கடை இடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ளது புகழ் பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். இந்தத் தெருவில் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பாத்திரக் கடை, நகைக் கடை, இனிப்பகம் உள்ளவை உள்ளன. அனைத்துமே பிரமாண்ட கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
இதில் பாத்திரக் கடை 5 தளங்களுடன் இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில் சில நாட்களுக்கு முன்பு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 ஊழியர்கள் உயிரிழந்தனர். கட்டடத்தின் 4 மற்றும் 5வது தளங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் தீயில் கருகி விட்டன.
இந்த தீவிபத்து தொடர்பாக அஜாக்கிரதையாக இருந்ததாக கடையின் மேலாளர் செல்வம் மற்றும் கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடையின் உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இடிக்க வியாபாரிகள் கோரிக்கை:
இந்த நிலையில், தீவிபத்துக்குள்ளான சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடைக்கு அருகில் உள்ள லக்கி பிளாசா வணிக வளாகத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட சிறு கடைகள் மற்றும் அந்தப் பக்கத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்களும், ஊழியர்களும், பாத்திரக் கடையை முழுமையாக இடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ் தீவிபத்தால் அந்த நிறுவனத்தை விட தங்களுக்கே பெரும் பாதிப்பும், பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளதாக லக்கி பிளாசாவில் கடை வைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.
இங்கு 150க்கும் மேற்பட்ட டெய்லர் கடைகள் உள்ளன. சுடிதார் தைத்துத் தருவதுதான் இவர்களது ஸ்பெஷாலிட்டி. துணியைக் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைத்துத் தந்து விடுவார்கள். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், உரிமையாளர்களும் தற்போது கடைகளை மூடி விட்டு கவலையுடன் உள்ளனர்.
இங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறுகையில், தீவிபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையின் பெரும்பகுதி சேதமடைந்து விட்டது.எனவே முழுக் கட்டடத்தையும் இடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் கட்டடம் இடியும் ஆபத்து உள்ளது. அப்படி நடந்தால் பெரும் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படும்.
சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டால்தான் நாங்கள் கடைகளைத் திறந்து நிம்மதியாக தொழில் பார்க்க முடியும். இங்குள்ள கடைகள் அனைத்தும் சிறுகடைகள்தான். கடன், உடன் வாங்கி நாங்கள் கடைகளை நடத்தி வருகிறோம்.
எங்களது தொழிலாளர்கள் கடைகளைத் திறக்க முடியாமல்,வேலை இல்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர். எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே அனைவரும் கூடிப் பேசி சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையை இடிக்க வேண்டும் என்றறு கோரி தர்ணாவில் ஈடுபட யோசித்து வருகிறோம் என்றனர்.
2 தளங்கள் இடிக்கப்படுகின்றன:
இதற்கிடையே தீ விபத்து நடந்த கடையை பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். பல மணி நேரம் தீ எரிந்ததால், ஐந்தாவது மற்றும் நான்காவது தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் கம்பிகள் உருகி, சில இடங்களில் கான்கிரீட் தளம் தொங்கியது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு தளங்கள் மட்டும் முதல் கட்டமாக ஓரிரு நாட்களில் இடிக்கப்படுகின்றன. தரைத்தளம், அதையடுத்துள்ள இரண்டு தளங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அந்த தளங்கள் இடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அப்பட்டமான விதிமீறல்:
இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் விதி மீறல் அப்பட்டமாக நடந்துள்ளதாக தீயணைப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
தீவிபத்து ஏற்பட்டால் தண்ணீரை அனுப்பி பீய்ச்சியடிக்க வால்வுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் பிளாஸ்டிக் குழாய்களை மட்டுமே சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் பொருத்தி வைத்துள்ளது. அதாவது ஒப்புக்காக குழாயை வைத்துள்ளனர்.
இதனால் அதன் மூலமாக தண்ணீரை அனுப்பி தீயணைக்க முடியாமல் போய் விட்டது. வால்வு பொருத்தப்பட்டிருந்தால் உடனடியாக தீயை அணைத்திருக்கலாம்.
மேலும், தப்பித்து வருவதற்கு எந்தவித வழியும் கட்டடத்தில் செய்யப்படவில்லை. இதை விட முக்கியமாக தீயணைப்புத் துறையிடமிருந்து ஆட்சேபனை இல்லை சான்றிதழையும் சரவணா ஸ்டோர்ஸ் பெறவில்லை. இதுதான் மிகப் பெரிய தவறாக கருதப்படுகிறது.
தற்போது சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பல்வேறு பரபரப்பு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசும் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண விரும்புகிறது என்பதை அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
காற்றில் பறக்க விடப்பட்ட ஐகோர்ட் உத்தரவு:
சென்னையில் விதி மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பான வழக்கில், இத்தகைய கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அனுமதியற்ற கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டாம் என்று மின் வாரிய செயற்பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் முன்பு கடிதம் எழுதினார். இதனால், அனுமதியற்ற கட்டடங்களுக்கு தற்காலிக கடிவாளம் போடப்பட்டது. ஆனால், சில நாட்களுக்குப் பின், அந்த உத்தரவு சென்னைக்கு மட்டுமே பொருந்தும்' என்று கூறி, வாரியத் தலைவரின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு அமைப்புகளும், இந்த உத்தரவை மின் வாரியம் கடைப்பிடித்தால், அனுமதியற்ற கட்டடங்கள் உருவாக வாய்ப்பில்லை என்று அரசுக்கு ஆலோசனை தெரிவித்தன.
இது தொடர்பான கருத்துக்களை ஏற்று மின் வினியோக விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர, தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்தது.
அந்த திருத்தத்தில், புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது, அதற்கான கட்டட வரைபட அனுமதியை இணைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கடந்த மார்ச்சில் இதற்கான வரைவு வெளியிடப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்தன. கட்டடங்களுக்கான வரைபட அனுமதியை, தகுந்த அமைப்பிடம் பெற வேண்டும் என்பதை அதிகாரம் பெற்ற அமைப்பிடம் என சேர்க்க வேண்டும் என்று, கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையத்துக்கு தெரிவித்திருந்தது.
ஆனால், எந்த திருத்தமும் செய்யாமலே கடந்த மே 22ல் இறுதி திருத்தம் வெளியிடப்பட்டு, அரசு கெஜட்டிலும் வெளியானது. அதன்பின், தலைமைப் பொறியாளரிடமிருந்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கும் இந்த திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மண்டலப் பொறியாளர், உதவி பொறியாளர் என ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்த திருத்தம் பற்றியே மின் வாரியத்தின் கீழ் மட்ட அலுவலர்களுக்குத் தெரிய வந்துள்ளது.அனுமதியற்ற, விதிகளை மீறிய, பாதுகாப்பற்ற கட்டடங்கள் கட்டப்படுவதை இந்த உத்தரவு தடுக்கும் என்பதால், சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது சரவணா ஸ்டோர்ஸ் தீவிபத்தில் கிடைத்த பாடத்தைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள அனைத்து பிரமாண்ட கட்டடங்களிலும் தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக உள்ளனவா என்பதை தீயணைப்புத் துறையும், காவல்துறையும், அரசும் ஆய்வு செய்து தவறு செய்திருப்பவர்களை உடனுக்குடன் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தி.நகர் உள்ள பிரமாண்டக் கடைகளுக்கு சென்னைவாசிகளை விட வெளியூர்வாசிகள்தான் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக சரவணா ஸ்டோர்ஸுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்.
எனவே சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் அனைத்துக் கட்டடங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தீபாவளி வருவதால் ..
விரைவில் தீபாவளிப் பண்டிகை வரவுள்ளது. இந்த சமயத்தில் தி.நகர் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும். எனவே அதற்குள் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும், தீயணைப்புத் துறையும் உறுதி செய்தால்தான் மக்களால் நிம்மதியாக ஷாப்பிங் செய்ய முடியும் என்பதால் இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications