இந்தியாவுக்கு சலுகைகள்-என்.எஸ்.ஜி. ஒப்புதல்: அணு ஒப்பந்தத்துக்கு தடை நீ்ங்கியது

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
வியன்னா: 45 நாடுகளைக் கொண்ட அணு எரிபொருள் சப்ளை குழுமம் (என்.எஸ்.ஜி.) இந்தியாவுக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் இருந்த கடைசி சிக்கலும் தீர்ந்து விட்டது.

இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி தருவது, அதற்கு நிபந்தனையற்ற சலுகைகள் வழங்குவது தொடர்பாக என்.எஸ்.ஜி. விவாதித்தது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து நேற்று முன்தினம் 2வது கட்ட கூட்டம் கூட்டப்பட்டது. நேற்றுடன் முடிவடைவதாக இருந்த இந்தக் கூட்டத்திலும் நேற்று வரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

அணு ஆயுத பரவல் தடை சட்டம் உள்ளிட்ட சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு நிபந்தனைகள் இல்லாமல் சலுகைகள் தர பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதில் முக்கியமானவை ஆஸ்திரியா, அயர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை.

இதனால் இந்தியாவுக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அமெரிக்காவின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட திருத்த வரைவறிக்கை குறித்தும் இந்த நாடுகள் திருப்தி தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக இழுபறி நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆஸ்திரியா, நியூசிலாந்து, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சமாதனப்படுத்தும் வேலையில் அமெரிக்காவும், இந்தியாவும் இறங்கின.

இதன் காரணமாக நேற்று மட்டும் என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் 3 முறை கூடிப் பேசினர். இந்தச் சூழ்நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இந்தியா அணு ஆயுதப் பரவல் தடுப்பில் உறுதியாக உள்ளது. இதுதொடர்பான முயற்சிகளிலும் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுத சோதனையை நடத்துவதில்லை என்ற சுய கட்டுப்பாட்டை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. அதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. இதையடுத்து என்.எஸ்.ஜி. கூட்டத்தை இன்று வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

எனவே தற்போது சாதக நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்தியாவுக்கு சலுகைகள் கிடைக்கும் என்றும் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை அமைச்சர் ஜான் ரூட் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் அறிக்கைக்கு ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு அளித்து, அதன் அடிப்படையில், சலுகைகளைத் தர ஒப்புக் கொண்டன.

சலுகைகள் வழங்குவது குறித்து ஆஸ்திரியா வெளியிட்ட அறிக்கையில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

அணு ஆயுதப் பரவல் தடுப்பில் இந்தியா உறுதியாக இருப்பதை உணர்கிறோம். இதை வரவேற்கிறோம். எனவே சலுகைகள் வழங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது.

அணு ஆயுத சோதனை நடத்துவதில்லை என்ற இந்தியாவின் உறுதிமொழியின் அடிப்படையில் இந்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தியா இனிமேல் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது. நடத்தினால் உடனடியாக சலுகைகள் ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மகிழ்ச்சி:

என்.எஸ்.ஜி.ஒப்புதல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றி என்று மன்மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், இது சிவப்பெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம். பிரதமருக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நாட்டுக்கும் கிடைத்த வெற்றி இது.

அணு வர்த்தக தீண்டாமையிலிருந்து இந்தியாவை விடுவித்துள்ளனர் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் என்றார்.

34 ஆண்டு தனிமைக்கு முடிவு:

இதையடுத்து இந்தியாவுக்கு சலுகைகள் வழங்க என்.எஸ்.ஜி. கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. இதன் மூலம் 34 ஆண்டுகளாக அணு வர்த்தகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த இந்தியாவுக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் இருந்த அனைத்து தடைகளும் தற்போது நீங்கி விட்டன. ஒப்பந்தம் அடுத்து அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸுக்குப் போகிறது.

அங்கு இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். புஷ் அதிபர் பதவியிலிருந்து போகும் முன்பு இந்த வேலைகள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த அதிபர் வரும் வரை ஒப்பந்தம் காத்திருக்க வேண்டும்.

வெற்றியைப் பறித்தவர்கள்:

என்.எஸ்.ஜியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது பிரணாப் முகர்ஜியின் கடைசி நேர அறிக்கைதான் என்றால் மிகையில்லை.

இருப்பினும் வியன்னாவில் முகாமிட்டு வெற்றிக் கனி கிடைக்க பாடுபட்டவர்கள் வெளியுறவு செயலாளர் எஸ்.எஸ்.மேனன், பிரமதரின் தூதுவர் ஷியாம் சரண், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர், ஆர்.பி.குரோவர், வெங்கடேஷ் வர்மா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கட்டுரை:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+