திமுக குறித்து ராமதாஸ் கவலைப்படத் தேவையில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இல்லாத பாமகவுக்கு திமுக பற்றி ஏன் கவலை? திமுகவுக்கு ஓரிடம் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? அதை பற்றி ராமதாஸ் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தற்போது உள்ள சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் நடந்தால், திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திமுக கூட்டணியில்தான் பாமக இல்லையே, அப்படி இருக்கும்போது திமுகவுக்கு ஒரு இடம் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? அதைப்பற்றி அவர் ஏன் கவலைப்படுகிறார். சட்டசபை தேர்தல் ஒன்றும் தற்போது நடக்கப் போவதில்லை.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்தான் பாமக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வரப்போகிறது என்று ஏற்கனவே அவர் கூறியிருக்கிறார். அவர் வரட்டும்; தமிழகத்தை ஆளட்டும் என்று பெருந்தன்மையோடு நானும் கூறியிருக்கிறேன். அதே பெருந்தன்மையோடுதான் அவரும் திமுகவு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியிருக்கிறார் போலும்.

துதி பாடும் எண்ணம் வந்தால்...

மின் வெட்டு பிரச்சனை குறித்து ஒவ்வொரு நாளும் நான் எந்த அளவுக்கு அக்கறை காட்டி வருகிறேன் என்பதை பகுதி நேர அரசியல்வாதிகள் அறியமாட்டார்கள். மாதக் கணக்கில் ஓய்வெடுப்பவர்களுக்கு துதிபாடும் எண்ணம் வந்துவிட்டால், மற்றவர்கள் ஒவ்வொரு பிரச்சனையில் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அறிய நேரம் இருக்காது.

நான் ஏதோ குடும்பப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். குடும்பத்தை குப்பையில் வீசிவிட்டு போய்விடக் கூடாது. குடும்பத்துக்காக மற்றவர்களை புறம் தள்ளிவிடவும் கூடாது என்பதை அறிந்தவன் நான்.

மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்குவதில் ஊழல் நடப்பதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது புகார் கலப்படமற்ற கற்பனை.

தமிழ்நாடு மின்வாரியத்தின் நான்கு அனல்மின் நிலையங்களின் (2,970 மெகா வாட்) ஓராண்டு மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் அளவு சுமார் 1.5 கோடி டன்கள். இந்த நிலக்கரியை, இந்திய நிலக்கரி நிறுவனம், நிலக்கரி இணைப்பு நிலைக்குழுவின் ஒதுக்கீடு ஆணையின்படி வழங்க வேண்டும்.

இந்திய நிலக்கரி நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கும் நிலக்கரியின் விலையை, இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் மத்திய அரசு அவ்வப்போது நிர்ணயம் செய்கிறது. அந்த விலையில்தான் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் நிலக்கரியை கொள்முதல் செய்ய முடியும்.

கடந்த 2003ம் ஆண்டு வரை இந்திய நிலக்கரி நிறுவனம், தேவையான நிலக்கரியை தமிழ்நாடு மின்வாரியத்துக்கும் இதர மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் வழங்கி வந்தது. கடந்த 2004ம் ஆண்டு இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி குறைவாக இருக்கும் என்று கணித்து, மின் வாரியங்களையும், இதர மின் உற்பத்தி நிறுவனங்களையும் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளுமாறு மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியது.

தமிழ்நாடு மின்வாரியம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியின் இலக்கு ஆணஅடுக்கு 1.56 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் 2005ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு மின்வாரியம் தனக்குத் தேவையான நிலக்கரியை மத்திய பொதுத் துறை நிறுவனமான கனிமம், உலோக வர்த்தக நிறுவனம் (எம்எம்டிசி) மூலம் இறக்குமதி செய்து வருகிறது.

தமிழ்நாடு மின்வாரியம் நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. எம்எம்டிசி மூலம்தான் இறக்குமதி செய்கிறது. ஒவ்வொரு முறையும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை நிர்ணயம் செய்யும்போது. அன்றைய சந்தை விலையையும், அதே சமயம் மற்ற நிறுவனங்கள் வாங்கிய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்து குறைவான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு மின்வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலக்கரியின் விலையை, மற்ற நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த விலையோடும். சந்தை விலையோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைவாக உள்ளது.

கலப்படமற்ற கற்பனை...

எம்எம்டிசி மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் எம்எம்டிசி மற்றும் தமிழ்நாடு மின் வாரியத்தின் ஒப்புதலுடன் உலக அளவில் சான்றிதழ் பெற்ற நிறுவனம் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மின் வாரியம் நிர்ணயித்துள்ள தரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கிரிக்கு மட்டுமே பணம் வழங்கப்படுகிறது.

எனவே நிலக்கரி வாங்குவதில் ஊழல் நடப்பதாக ராமதாஸ் கூறுவது கலப்படமற்ற கற்பனையே காட்டுகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+