விஜயன் கொலை: மைத்துனி பானுமதி பரபரப்பு வாக்குமூலம்

எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கில் அவரது மனைவி சுதாவின் தங்கை பானு என்கிற பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொடுத்த வாக்குமூலத்தில் விஜயனை அடித்து கொன்ற கூலிப்படைக்கு சென்னை போலீஸ்காரான கருணாகரன் என்பவர் தான் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொந்த அக்காள் கணவரை கொல்லத் துணிந்தது குறித்து பானுமதி பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் விவரம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் தம்பி நாராயணன்தான் எனது தந்தை. எனக்கு லதா, கீதா, சுதா, ஜானகி என்ற 4 அக்காள்களும், மனு என்ற தங்கையும், திலீபன் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) என்ற சகோதரரும் உள்ளனர்.
எனது தந்தை நாராயணன் 6 உயர்நிலை பள்ளிகளையும், ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியையும் தொடங்கினார். ஒவ்வொரு பள்ளியையும் எனது சகோதர, சகோதரிகள் நிர்வகித்தனர்.
வடபழனியில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான் முதல்வராக இருந்தேன். என்னுடைய கட்டுப்பாட்டில் இந்த பள்ளி இருந்தது.
எனது தந்தை இறப்பதற்கு முன் சத்யா கல்வி சாரிட்டபிள் சொசைட்டி' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கினார். அந்த அறக்கட்டளையின் கீழ் அனைத்து பள்ளிகளையும் கொண்டு வந்து, அந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பை எனது சகோதரர் திலீபனிடம் ஒப்படைத்துவிட்டார்.
இதனால் பள்ளி நிர்வாகம் அனைத்தும் திலீபனிடம் போய்விட்டது. நான் முதல்வராக பணியாற்றிய பள்ளியும் திலீபன் வசம் சென்றது. இந்த பள்ளியின் கிளை பள்ளி ஒன்று காட்டாங்கொளத்தூரில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் கட்டுவதற்காக எனது திருமணத்தின்போது சீதனமாக கொடுத்த அண்ணாநகரில் உள்ள பங்களாவை ரூ.40 லட்சத்துக்கு விற்று செலவழித்தேன். இந்த விஷயத்தை சொல்லி இந்த பள்ளியை மட்டும் எனக்கு சொந்தமாக கொடுக்கும்படி திலீபனிடம் மன்றாடினேன். திலீபன் அதற்கு மறுத்து விட்டார்.
எனது அத்தான் (அக்காள் சுதாவின் கணவர்) விஜயன், திலீபனுக்கு ஆதரவாக செயல்பட்டு பள்ளியை என்னிடம் கொடுக்கவிடாமல் தடுத்து வந்தார்.
புவனா மூலம் அறிமுகமான கருணா:
எனது பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியையாக பணிபுரிந்த புவனா என்பவர் எனக்கு நல்ல தோழி ஆவார். அவரிடம் என் கஷ்டத்தை சொல்லி அடிக்கடி அழுவேன்.
அப்போது, நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கருணா என்ற கருணாகரன் எனக்கு நல்ல நண்பர் என்றும், அவரிடம் சென்று முறையிட்டால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் புவனா.
இதையடுத்து போலீஸ்காரர் கருணாவை சந்தித்தேன்.
விஜயனை கடத்தி சென்று அடித்து உதைத்து என் வழிக்கு வராமல் மிரட்டும்படி கருணாவிடம் கூறினேன்.
அதற்கு கருணா அவ்வாறு செய்தால் நான் மாட்டிக் கொள்வேன். விபத்தில் இறந்ததுபோல விஜயனை தீர்த்து கட்டிவிடலாம். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு நல்ல வழி கிடைக்கும் என்றார். இதற்கு நானும் சம்மதித்தேன்.
கடந்த மே மாதம் சுரேஷ் என்ற தனக்கு தெரிந்த ரவுடி இருப்பதாகவும், அவன் மூலம் விஜயனை தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்றும் கருணா கூறினார். முதல் கட்டமாக ரூ.2 லட்சம் வேண்டுமென்று கேட்டார்.
வடபழனியில் உள்ள எனது வீட்டில் வந்து போலீஸ்காரர் கருணா பணத்தை வாங்கினார்.
ஜூன் 4ம் தேதி அன்று இரவு செல்போனில் பேசிய கருணா விஜயனின் கதை முடிந்துவிட்டதாக தெரிவித்தார். ஒரு வாரம் கழித்து கொலைக்கான கூலி தொகை மீதி ரூ.2 லட்சத்தையும் கருணா என்னிடம் வாங்கி சென்றார் என்று கூறியுள்ளார் பானுமதி.
பானுமதிக்கு ஸ்ரீதர் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் பெங்களூரில் படிக்கின்றனர்.
கைதாகியுள்ள போலீஸ்காரர் கருணாவும் திருமணமானவர். அவரது மனைவி நர்சாக பணிபுரிகிறார். இவர்களுக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
பானுமதிக்கு, போலீஸ்காரர் கருணாவை அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரியை புவனா கணவரை பிரிந்து வாழ்கிறார். அவரது கணவர் துபாயில் வசிக்கிறார். தனியே இருந்த புவனாவும், போலீஸ்காரர் கருணாவோடு நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
புவனா-கருணா கள்ளத் தொடர்பால் புவனாவை அவரது கணவர் விவாகரத்து செய்துள்ளார்.
இதற்கிடையே போலீஸ் பிடியில் கருணா சிக்கிய தகவல் கிடைத்ததும் புவனா தனது உறவினர் ஒருவர் மூலம் துபாய்க்கு தப்பி ஓடி விட்டது தெரியவந்துள்ளது.
கருணா வாக்குமூலம்:
இந் நிலையில், கொலை திட்டத்தை நிறைவேற்றியது குறித்து கருணா கொடுத்துள்ள வாக்குமூலம்:
புவனா மூலம் எனக்கு அறிமுகமான பானுமதி சொன்ன கதையை கேட்டு இரக்கப்பட்டுதான் இந்த கொலையை செய்துவிட்டோம்.
சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணியளவில் நான் ஒரு காரில் பீமண்ணகார்டன் தெரு, டர்ன்புள்ஸ் ரோடு சந்திப்பில் காத்திருந்தேன். இன்னொரு அம்பாசிடர் காரில் கார்த்திக், சாலமன், சுரேஷ் ஆகியோர் காத்திருந்தார்கள். மோட்டார் சைக்கிள் ஒன்றில் இன்னொரு கார்த்திக்கும், தீனாவும் இரும்பு பைப்புடன் தயாராக இருந்தனர்.
விஜயன் அவரது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வெளியே வந்தவுடன் காரை ஸ்டார்ட் செய்து வரும்படி சுரேசுக்கு தகவல் கொடுத்தேன். அவன் உடனடியாக அம்பாசிடர் காரை ஓட்டி வந்தான். விஜயன் கார் மீது திட்டமிட்டப்படி மோதினான். ஆனால், எதிர்பார்த்தபடி விஜயனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் காரை விட்டு கீழே இறங்கி சுரேசிடம் சண்டை போட்டு கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த கார்த்திக்கும், தீனாவும் இரும்பு பைப்பால் விஜயனின் பின்பக்கமாக அவரது தலையில் 4 முறை ஓங்கி அடித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். நானும், என்னுடைய காரில் தப்பி வந்துவிட்டேன். சுரேஷ் அவன் வந்த காரில் தனியாக போய்விட்டான் என்று கூறியுள்ளார்.+












Click it and Unblock the Notifications