மின் சிக்கனம்-அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடும் மின் பற்றாக்குறை நிலவும் இந்த காலகட்டத்தில் அரசு விழாக்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்த வசீகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவி்ல்,
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அறிவிக்கப்பட்ட மின்வெட்டாக 6 மணி நேரம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாமல் பல இடங்களில் தொடர்ந்து மின் வெட்டு நிலவுகிறது.
இந்த அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின் வெட்டுக்களால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் நிர்வாகத் திறமையின்மையின் காரணமாகவே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
தற்போது 6 மணி நேரமாக உள்ள மின்வெட்டு 8 மணி நேரமாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அந்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பாக அது இருக்கும்.
இந்த மின் வெட்டால் விவசாயிகள், சிறு, குறு தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டீசலை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு வரிச் சுமையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் டீசல் தட்டுப்பாடு காரணமாக அந்த தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன.
அதே நேரத்தில் அரசு விழாக்கள், அமைச்சர்கள் கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், பொது கூட்டங்கள் ஆகியவற்றின் போது சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய தேவைக்கு கூட மின்சாரம் இல்லாமல் அவதிப்படும்போது ஆடம்பர விழாக்களுக்கு மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இது போன்ற விழாக்களுக்கு அரசு அனுமதிக்கக் கூடாது, அரசும் அது போன்ற விழாக்களை நடத்தக் கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி அரசு தரப்பு வக்கீலிடம், மின் சிக்கனம் தொடர்பாக அரசிடம் ஏதேனும் கொள்கை உள்ளதா என்று கேட்டார். உள்ளது என வக்கீல் பதிலளித்தார்.
திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி பயன்படுத்தினால் இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனை கொடுக்கலாம், கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்து விரிவான முடிவுகள் எடுத்து விளம்பரப்படுத்த வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். 4 வார காலத்திற்குள் இவை செய்யப்பட வேண்டும்.
சட்ட விரோத மின் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மின் வெட்டைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications