சென்னையில் அக். 18ல் தேமுதிக இளைஞர் அணி மாநாடு
சென்னை: சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 18ம் தேதி தேமுதிக இளைஞர் அணி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள் திரண்டு வர வேண்டும் என கட்சித் தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலையை தேடி வெளிநாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் இளைஞர்கள்தான் அதிகம். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி வஞ்சிப்பது ஒரு புறம்.
அப்படியே அவர்கள் வெளிநாடு போனாலும், அங்கே உள்ள வெஞ்சிறைகளில் வாடுவது மறுபுறம். இவ்வாறு பல இடங்களிலும் நம் நாட்டு இளைஞர்கள் தங்கள் இளமையை இழந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் எதிர்காலம் நம் கையில் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப தொண்டாற்றுவது நமது கடமையாகும்.
அதன் முதற்படியாக உங்களை எல்லாம் ஒரு சேரக் காண வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதற்காக அக்டோபர் 18ம் தேதி சென்னையில் உள்ள தீவுத்திடலில் மாநில இளைஞர் அணி சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது.
தேமுதிக தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டும், அதை கொண்டாடும் வகையில், மாநில இளைஞர் அணி சார்பில், பேரணியும், மாநாடும் நடைபெறவுள்ளது.
இன்றிலிருந்தே மாநாட்டுக்குத் தயாராக வேண்டும். அதற்கான திட்டங்களை ஆர்வத்துடன் வகுத்திடவும், மாநாட்டிற்குத் தவறாமல் வந்திடவும் வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications