நீங்களுமா இப்படி?-கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே இயக்கம் நடத்துவோரும், அந்த மக்கள் பயன் பெறுவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சனம் செய்ய முற்பட்டால் என்ன செய்வது என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று வழங்குகின்ற இந்த அரசு, வரும் அக்டோபர் 2ம் தேதி, காந்தியடிகள் பிறந்த நாள் முதல் மளிகைப் பொருள்களையும், மானிய விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ளது.

விலைவாசி உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்திற்காகவும் இதுவரை குரல் கொடுத்து வந்த இயக்கத்தின் தலைவர்கள் சிலர் வரவேற்பதற்குப் பதிலாக, எதிர் விமர்சனங்கள் செய்கின்றனர். இதை கண்டும் கேட்டும் வியப்பும் மிகுந்த மனக்கிலேசமும் அடைகிறேன்.

குறிப்பிட்ட பத்து மளிகைப் பொருள்களை கடைகளில் சில்லறையாக வாங்கினால் ரூ.67ஆகிறது. இப்போது அதே பொருள்களை அரசே வாங்கி பைகளில் இட்டு ரூ.50க்கு வழங்கப்படும். இதனால் சாதாரண மக்களுக்கு கணிசமாக ரூ.17 குறையும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

இதற்கு எதிர்வாதமாகக் சில கட்சித் தலைவர்கள், மதுரை மளிகைக் கடைகளில் அதே சமையல் சாமான்கள் உள்ள பையை ரூ.47 ரூபாய்க்கே பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது உண்மையாகவே இருக்குமானால், அது கூட நமது அரசின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக கருதுவேன். மக்களுக்கு இதனால் இன்னும் பணம் மிச்சப்படுமானால் அவர்களுக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி.

விலைவாசியைக் கட்டுப்படுத்த நாம் எடுத்த முயற்சிக்கும் மகத்தான வெற்றி என்றே நாம் ஆறுதல அடைகிறோம்.

விமர்சனம் செய்திருப்பவர், அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு அப்படியே நான் அறிவித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அரசு தற்போது அறிவித்துள்ள பத்து சமையல் பொருட்களின் விலைப் பட்டியலை சென்னையிலே உள்ள சில்லறை மளிகைக் கடைகளில் சென்று பெற்றதில், இதே பொருட்களின் விலை ரூ. 62.40 முதல் ரூ.93 ரூபாய் விற்கப்படுகிறது.

உதாரணமாக, அமுதம் அங்காடிகளில் ரூ. 62.40க்கும், ஜவகர் நகர் அன்னை புரோவிஷன் ஸ்டோர்சில் ரூ.73.25க்கும், அசோக் நகர் கிருஷ்ணா ஸ்டோர்சில் ரூ.86.75க்கும், ராமாபுரம் சுந்தர் ஸ்டோர்சில் ரூ.93க்கும் இதே பொருட்கள் விற்கப்படுகிறது.

இதே மளிகைப் பொருட்கள் மதுரையிலே ஏதோ மளிகைக் கடையில் ரூ.47க்கே கிடைப்பதாக பொறுப்புள்ள கட்சி தலைவர் சொல்லி இருக்கிறாரே என்று மதுரையில் சில சில்லறைக் கடைகளில் இதே பொருட்களின் விலை என்ன என்று விசாரிக்கப்பட்டது.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள காந்தி ஸ்டோர்சில் இந்த பொருட்களின் விலை ரூ.64. மாடர்ன் ஆயில் ஸ்டோர்சில் ரூ.71.59 என்றும், ஜெயா ஸ்டோர்ஸ் குமாரம், மதுரை என்ற கடையில் ரூ.68 என்றும் எஸ்கேபிபிகே ஸ்டோர்சில் ரூ.66 என்றும் விலை குறிப்பிட்டுள்ளார்கள்.

இதையெல்லாம் விசாரித்து விட்டுதான் இந்த பொருட்களை வாங்கிடும் மக்கள் ரூ.17 அளவிற்கு பயன்பெறுவார்கள் என்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, அதனை பலரும் வரவேற்று நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

எதற்கும் குதர்க்கம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் தெரிவித்திருப்பார்கள் என்றால் சரி. அது அவர்கள் இயல்பு என்று விட்டு விடலாம். ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே இயக்கம் நடத்துவோரும், ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக நடத்தப்படும் முயற்சிகளுக்கு விமர்சனம் செய்ய முற்பட்டால் என்ன செய்வது.

அது மாத்திரமல்ல, அரசாங்கம் இவ்வாறு குறைந்த விலையில் மானிய விலையில் சமையல் பொருட்களின் விலையைக் குறைத்து விற்க முற்படும்போது, வெளி சந்தையிலே இதே பொருட்களை விற்போரும், தங்களுடைய லாபத்தைக் குறைத்துக் கொண்டு, குறைந்த விலையிலே பொருட்களை விற்க முற்படுவார்கள் என்ற வாய்ப்பும் இதிலே உள்ளது.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறு மானிய விலையில் சமையல் பொருட்களை விற்கின்ற முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பொருட்களை அரசு, எந்தத் தனியாரிடம் இருந்தும் தன்னிச்சையாக வாங்கி அதனை விற்பதாக இல்லை. முறைப்படி ஒவ்வொரு பொருளுக்கும் டெண்டர் கோரியே பெற உள்ளது.

அப்போது அரசாங்கத்திற்கு மேலும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்குமானால், அந்தப் பயனும் மக்களுக்கே போய்ச் சேரும் வகையிலே திட்டத்திலே மாறுதல்களைச் செய்யவும் இந்த அரசு தயாராகவே உள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+