ஜனநாயகன்.. விஜய்யின் கடைசி படம்.. மொத்தமாக தியேட்டர்களை புக் செய்யும் தவெக அமைச்சர்கள் & MLAக்கள்
சென்னை: ஜூலை 23ம் தேதி பல்வேறு சட்டப் போராட்டங்கள், சென்சார் சிக்கல்கள் மற்றும் இணையதள கசிவு போன்ற தடைகளைத் தகர்த்து, எச். வினோத் இயக்கத்தில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'ஜனநாயகன்' உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. .
இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் கோலிவுட் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளது. மேலும், இத்திரைப்படம் தயாரிப்பில் இருந்த காலத்திலேயே தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் திருப்பங்கள் அரங்கேறி, விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார்.
தமிழகத்தின் ஒரு சிட்டிங் முதலமைச்சரின் திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாவது இதுவே முதல்முறை என்பதால், இது வெறும் சினிமா ரிலீஸாக மட்டுமில்லாமல் ஒரு பிரம்மாண்ட அரசியல் திருவிழாவாகவே மாறியிருக்கிறது.
தியேட்டர்களை மொத்தமாக வளைக்கும் அமைச்சர்கள்!
தற்போது கோடம்பாக்கம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள மிக முக்கியமான நம்பத்தகுந்த தகவல்களின்படி, ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விஜய்யின் கடைசி திரையுலகப் பயணத்தை வரலாறு காணாத வகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய மாநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள தியேட்டர்களில், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்குவதற்கு தற்போதே தீவிர வேலைகளில் இறங்கியுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை, சேலம் உள்ளிட்ட முன்னணி நகரங்களில் உள்ள பிரம்மாண்ட திரையரங்குகளில் முதல் இரண்டு நாட்களுக்கான காட்சிகளின் பெரும்பாலான டிக்கெட்டுகளை தவெக நிர்வாகிகளே தங்களது கட்சித் தொண்டர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் முன்பதிவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய்க்கு மாஸ் பிரியாவிடை கொடுக்க திட்டம்!
இது குறித்து கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, *"இது வெறும் சினிமா கொண்டாட்டம் அல்ல. திரையுலகில் இருந்து முழுமையாக விடைபெற்று, மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எங்கள் தலைவருக்கு நாங்கள் கொடுக்கும் பிரம்மாண்ட பிரியாவிடை.. நன்றிக்கடன்.
அவரின் கடைசி படத்தை தியேட்டர்களில் திருவிழாவாக கொண்டாடப் போகிறோம்"* என்று உணர்ச்சிப்பொங்க தெரிவிக்கின்றனர்.
பல தொகுதிகளில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக திரைப்படத்தை காண்பிக்கும் வகையில் தியேட்டர்களின் மொத்த காட்சிகளையும் புக் செய்ய தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் தியேட்டர் அதிபர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழக அரசு விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்!
ஒருபுறம் ஆளும் கட்சியின் அமைச்சர்களும், நிர்வாகிகளும் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு தயாராகி வந்தாலும், முதலமைச்சர் விஜய் இந்த விஷயத்தில் மிகவும் கறாரான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணமான 190 ரூபாயை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்கப்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் அலுவலகம் தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது.
கட்சியினர் மொத்தமாக டிக்கெட் புக் செய்தாலும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும், டிக்கெட் விலையை உயர்த்தி ரசிகர்களைச் சுரண்ட நினைக்கும் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆளும் கட்சி நிர்வாகிகளின் இந்த ஒட்டுமொத்த தியேட்டர் புக்கிங் வேகம், வரும் ஜூலை 23 அன்று 'ஜனநாயகன்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய உலக சாதனை படைக்கும் என்பதை தற்போதே உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
