சென்னையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை சாவு
சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட 5 மாத குழந்தை இறந்தது. ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையையும் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அயனாவரம் நியூ ஆவடி ரோடு கக்கன்ஜி நகரைச் சேர்ந்த டிவி நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி வசந்தகுமாரி. இவர்களது 5 மாத குழந்தை சூர்யா.
நேற்று முன்தினம், சூர்யாவுக்கு தடுப்பூசி போடுவதற்காக அயனாவரத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சூர்யாவை பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு பகல் 12 மணியளவில் குழந்தைக்கு முத்தடுப்பு ஊசியும், மஞ்சள் காமாலை தடுப்பூசியும் ஒரே நேரத்தில் போடப்பட்டது.
பின்னர், குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால், வீட்டிற்கு கொண்டு சென்ற பின்னரும் குழந்தை தூங்கிய நிலையிலேயே இருந்தது. எழவே இல்லை.
இரவு 9 மணி ஆகியும் குழந்தை தூங்கி கொண்டே இருந்ததால் பயந்து போன பெற்றோர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் உடனே, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறினர்.
இதைத் தொடர்ந்து, குழந்தையை பெற்றோர் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர்.
தடுப்பூசியும், மஞ்சள் காமாலை தடுப்பூசியும் ஓரே நேரத்தில் போடப்பட்டதால் குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தேவியிடம் முறையிட்டனர். பின்னர், கவுன்சிலர் தலைமையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதன் பிறகு ஐ.சி.எப். போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கேயும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கவனக்குறைவாக நடந்து கொண்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications