விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: ராகுல்
அமிர்தசரஸ்: விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக 3 நாள் பயணமாக முதல் முறையாக பஞ்சாப் சென்றுள்ளார் ராகுல்.
பந்திதாவில் நடந்த சாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராகுலிடம் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்று சிலர் கேட்டனர். அதற்கு, விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றார் 38 வயதான ராகுல்.
பின்னர் கடந்த மே மாதம் நடந்த பஞ்சாப் பஞ்சாயத்து தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் இறந்தவர்களின் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து பேசினார். தேவையான உதவிகளை செய்தவதாகுவும், அதற்கான நடவடிக்கைகள் டெல்லி சென்ற உடன் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் நேற்று சென்று வழிபாடு நடத்தினார். பொற்கோவிலுக்கு நேரு மற்றும் இந்திரா குடும்பத்தினர் வருவது மிகவும் அரிதானது.
வழிபாட்டு தலத்தில், ராகுலுக்கு கௌரவ பட்டை அணிவித்தார் மத குரு. பொற்கோவிலில் 20 நிமிடம் இருந்த ராகுல், கோவிலுக்கு வரும் அனைவரையும் போல, தனது தலையை கைக்குட்டையால் கட்டி இருந்தார்.
அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல், நான் இங்கு ஒரு பக்தனாக வந்துள்ளேன். போட்டோ எடுத்துக் கொள்வதற்காக அல்ல. இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் பஞ்சாபில் தங்கியிருப்பேன் என்றார்.
பொற்கோவிலை தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஜாலியன் வாலாபாக் சென்ற ராகுல், அங்கு உயிர் தியாகம் செய்த விடுதலை போராட்ட வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, துர்க்கை கோவிலுக்கு சென்று வழிபட்டார்.












Click it and Unblock the Notifications