வதோதராவில் குண்டுவெடிப்பு - 3 குண்டுகள் கண்டுபிடிப்பு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து வருவதால் நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு முறை குண்டுகள் வெடித்துள்ளதால் அங்கு பல மடங்கு பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத ரீதியாக மிகவும் பதட்டமான நகரான வதோதராவில் நேற்று குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்குள்ள ஹதிகானா என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகேஉள்ள குப்பைத் தொட்டியில் ஒரு சிறுவன் நோண்டிக் கொண்டிருந்தபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் காயமின்றி தப்பினான். இருப்பினும் அருகில் இருந்த ஒரு வாகனம் பாதி சேதமடைந்தது.
உடனடியாக போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வந்தனர். அதே குப்பைத் தொட்டியில் வெடிக்காத நிலையில் இருந்த 3 குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைத்தனர்.
தடயவியல் நிபுணர்களும் அங்கு தீவிர ஆய்வை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசுப் பள்ளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.
அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. வெடித்த குண்டு மிகவும் குறைந்த சக்தி கொண்டது என போலீஸார் தெரிவித்துள்ளனர். தீவிரவாத செயலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அகமதாபாத்தில் ஜூலை 26ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பின்னர் வதோதரா நகருக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications