சென்னையில் விட்டு விட்டு மழை: ஓசூரில் மின்னலுக்கு 4 பெண்கள் பலி
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் காலை வரை விட்டு விட்டு கன மழை பெய்தது. ஓசூரில் மிக பலத்த மழை பெய்தது. அங்கு மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பலத்த காற்று வீசத் தொடங்கியது. சற்று நேரத்தில் இடியுடன் கன மழை பெய்தது. ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்யாமல் ஆங்காங்கு விட்டு விட்டு மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழை காலை வரை நிற்காமல் விட்டு விட்டுப் பெய்ததால் நகரில் நிலவிய வெப்பம் தணிந்தது. நகரின் சில இடங்களில் பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுந்தன.
ஓசூரில் 4 பெண்கள் பலி:
ஓசூர் பகுதியில், நேற்று பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழைக்கு 4 பேர் மின்னல் தாக்கி பலியானார்கள்.
ஓசூர் அருகே உள்ள பெரிய ஆலங்கிரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருடைய நிலையத்தில் ராகி பயிரை அறுவடை செய்து கொண்டிருந்த முருகனின் தாயார் துர்வாசம்மா, மனைவி கீதா, உறவுப் பெண்களான சரோஜா, புஷ்பா ஆகியோர் மின்னல் தாக்கிதில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புளிய மரத்திற்குக் கீழே மழைக்காக ஒதுங்கியிருந்தபோது அவர்களை மின்னல் தாக்கியது. முருகன் படுகாயமடைந்தார். அவரை சூளகிரி மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications