Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்வெட்டை மறைக்க இலங்கை பிரச்சனையா?-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை மறைப்பதற்காகத் தான் இலங்கை விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இலங்கையில் இனப் படுகொலையை கண்டித்தும், அங்கே அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியும் சென்னையில் நாளை (செவ்வாய்) மனிதச் சங்கிலி அணிவகுப்புப் போராட்டம் நடக்கிறது.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் இந்த போராட்டம் நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1956ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிற இலங்கை பிரச்சினையைத் தீர்க்க முடியாத கருணாநிதி, இப்போது தீர்க்கப் போவதாகச் சொல்வது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை மறைப்பதற்காகத் தான் என்று அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள்.

இந்தியாவில் தமிழ் மாநிலத்தில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும் மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாதென்றும் பொய் கூறி அரசியலுக்காகப் பேசுவோரின் அறியாமை கண்டு, அப்படிப் பேசுவோரை அலட்சியப்படுத்தி விட்டு, நாம் நமது ரத்தத்துடன் ஊறிய தமிழ் உணர்வு கொண்ட ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்கும் பணியினைத் தொடருவோம்.

இலங்கை பிரச்சினை அங்கே தமிழ் மொழியையும் தமிழரையும் தாழ்த்தும் பிரச்சினை. இந்தப் பிரச்சினை 1956ம் ஆண்டிலிருந்து தான் என்று நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் இன்னும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது அந்த பிரச்சினை என்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி என்னிடம் அளித்த பழைய 'விடுதலை' ஏடு சான்றாகத் திகழ்கிறது.

இலங்கையின் வரலாறு நமது தஞ்சை ராசராசன் எனும் பெருவேந்தன் காலத்துக்கு முன்பிருந்தே நமக்குப் பால பாடம். இன்னும் அந்த வரலாற்றின் சில எழுச்சி மிகு பக்கங்களைப் போல அமைந்த கண்டி மன்னன் விக்கிரம ராஜ சிங்கன் அங்கே கி.பி. 1815 வரையில் ஆட்சி புரிந்த வரலாறும், அதே ஆண்டில் கண்ணுசாமி என்ற அந்த தமிழ் மன்னனின் வீழ்ச்சியும், தோற்றுப் போய் சிறைப்பட்ட கண்ணுசாமி (ஆம், கண்டி விக்கிரம ராஜ சிங்கன்) தமிழ்நாட்டில் வேலூரில் சிறை வைக்கப்பட்டதும் நானறிந்த வரலாறு என்பதால்,

பதினாறு ஆண்டுகள் குடும்பத்துடன் சிறையிலிருந்து, சிறையிலேயே வேலூரில் மாண்டு விட்ட அந்த மன்னன் பெயரையும், வரலாற்றையும் மறந்து விடாமல் நினைவூட்ட; நான் முதல்வராக இருந்த 1.7.1990 அன்று வேலூரில் கண்டி தமிழ் மன்னன் பெயரால் முத்து மண்டபம் அமைத்து திறப்பு விழாவும் நடத்தினேன்.

இதெல்லாம் வரலாற்றுத் துளிகள். வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்களுக்கு வக்கணையாகத் தான் தோன்றும். இலங்கை தீவில் அரசோச்சிய தமிழ் அரசர்களில் பண்டாரக வன்னியனின் வரலாற்றை நூலாக எழுதியவன் நான் என்ற முறையில். இலங்கை வரலாற்றில் தந்தை செல்வநாயகம் வரையில் என் நெஞ்சில் நிற்பவர்கள்- அந்த தமிழ் உணர்வு தரிசாகப் போய் விடாத காரணத்தினால் தான் இன்றும் அந்த தமிழர்கள் இலங்கையில் படும் துன்பங்களை எண்ணித் துடித்துப்போகிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக திமுக என்ன செய்தது என்று தொடர்ந்து சிலர் தொடர்ந்து கேள்வி கேட்டு வருபவர்களுக்கு சுருக்கமாக அந்த பட்டியலைத் தருகின்றேன்.

1981ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, நான் அன்றைய இந்திய பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் "கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும், தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று கூறுகின்றன. அங்குள்ள அரசாங்கமே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகின்றது. வட கொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்பட்டுள்ளன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளை அடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.

அம்பாரை கோவில் தேர் நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவழித் தமிழர்களும் இலங்கை முழுதும் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது. கொழும்பில் வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்கு நிவாரணமளிக்க முன் வரும் அமைப்புகள் இயங்க அரசாங்கம் அனுமதி தர மறுக்கிறது. கலவரங்களை அடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. செய்திகள் உங்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் ஆதலால் இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் தங்கள் கவனத்தை செலுத்தி உதவிட வேண்டுகிறேன்'' என்று கேட்டுக்கொண்டேன்.

அந்த தந்தியைத் தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து, சென்னை மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழக அரசின் தடை உத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கானவர்கள் 29.8.1981 அன்று குழுமினர்.

ஆனால் மாவட்டச் செயலாளர் சீத்தாபதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் து.புருஷோத்தமன், என்.வி.என்.சோமு உள்பட 250 பேரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் நானே போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என்று அறிவித்தேன். அ.தி.மு.க. அரசு என்னையும் கைது செய்தது.

ஆம், இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் நான் கைது செய்யப்பட்டேன். நான் இலங்கை தமிழர்களுக்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள்- போராட்டங்கள் நடைபெற்றன. எனது வேண்டுகோளையும் மீறி பலர் நா விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி குறிப்பாக கோவிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன், சென்னை மேரி போன்றவர்கள் தீக்குளித்தனர்.

அதன் பின்னர் 1983ம் ஆண்டு தான் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

25.7.1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களவர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றவர்களை- கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், விறகுக் கட்டைகளால் தாக்கினர். அனைத்துக் கொடுமைகளும் சிறைக் காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றது.

அந்த ஒரு நாளில் மட்டும் 35 தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள். செய்தி கிடைத்தவுடன் திமுக கேளாக் காதுடையதாகவா இருந்தது?. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறும் என்று அறிவித்தேன். 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேர் அந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

27.7.1983 அன்று மீண்டும் 18 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இலங்கையிலே நடைபெற்ற வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள் என்று செய்தி கிடைத்தது. சென்னையிலே குடியிருந்த குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

31.7.1983 அன்று முகவை மாவட்ட கழக மாநாடு என அறிவிக்கப்பட்டதை இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாடாக மாற்றப்பட்டு ராமநாதபுரம் நகரிலே நடத்தப்பட்டது. தமிழக அரசு 2.8.1983 அன்று முழு அடைப்பு என்று அறிவித்து தமிழகம் முழுவதிலும் வெற்றிகரமாக நடத்தியது.

4.8.1983 அன்று ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்துவதென்று முகவை மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு தானாகவே முன் வந்து 5.8.83 அன்று தமிழகத்திலே ரெயில்கள் ஓடாது என அறிவித்தது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10.8.1983 அன்று நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.

1983ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் நான்கு நாட்கள் தமிழகம் முழுதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கூட்டங்களை நடத்தினோம். எதிர்க்கட்சியிலே தான் அப்போது இருந்தோமென்றாலும், 25.8.1983 அன்று பிரதமரின் தூதுவராக ஜி.பார்த்தசாரதி என்னை சென்னையிலே சந்தித்து பேசி விட்டுத் தான் பிறகு இலங்கை சென்றார். அவர் என்னைச் சந்தித்த போது இலங்கை தமிழர் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப் போராளிகளிடம் கொண்டுள்ள பரிவையும், அந்த அடிப்படையில் அவர் வழங்கிடும் உதவிகளையும் என்னிடம் விளக்கினார்.

1986-ம் ஆண்டு மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்து, சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன்.

சென்னை வந்ததும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தம், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள்.

இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், அனைவரும் கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்கு கண்டன ஊர்வலங்களும், பொது கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன்.

அந்த ஆண்டும் என்னுடைய பிறந்த நாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன்.

31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், ரெயில் போக்குவரத்து உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் பிரமாண்டமான கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், எழுதிக் கொண்டே போகலாம்.

1997ம் ஆண்டு திமுக ஆட்சியிலே இருந்த போது, இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்தபோது இதே ஜெயலலிதா என்ன சொன்னார்?

சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க கருணாநிதி முயல்கிறார் என்றும், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்றும் உள்நோக்கத்தோடு ஜெயலலிதா கடுமையாக ஓர் அறிக்கை விடுத்தார்.

அனைத்து கட்சிகளின் சார்பில் 21ம்ந் தேதி நடத்தவுள்ள மனிதச் சங்கிலி அணிவகுப்பை பற்றி அதனால் என்ன பயன் என்று ராசிபுரத்திலே போய் ஜெயலலிதா கேள்வி கேட்கிறார். இதே கேள்வியைக் கேட்டு, என்ன பேசுவது என்று தெரியாமலே வேறு சிலர் பேசித் திரிகிறார்கள்!.

இலங்கையில் தமிழினம் படும் துயர் கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி. எந்த இனமானத் தமிழ் மகன், எந்த மண்ணைத் திருத்தி வளமிகு சோலையாக்கினானோ, அந்த மண்ணிலே அவன் தலை பந்தாடப்படுகின்ற செய்தி கேட்டு, ஆயிரம் செந்தேள் செவியிலே கொட்டியது போல் துள்ளுகிறோம், துவண்டு போகிறோம், அதனை வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி.

இலங்கை கொடுமைக்கு ஒரு முடிவு காண இந்திய பேரரசு ஒருக்கணமும் தயங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தத் தான் மனிதச் சங்கிலி. ஐந்து கோடி தமிழர்கள் மட்டுமல்ல அயல் நாடுகளில் பரவியுள்ள தமிழ் இனம் முழுவதும் "இதற்கோர் முடிவே கிடையாதா?'' என்று கொதித்துக் கேட்கின்ற நிலையை உலகத்திற்கு வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி?

21ம் தேதி தமிழகத் தலைநகராம் சென்னையிலே நடைபெறும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்கான மனித சங்கிலி சரியாக 3 மணிக்கு தொடங்கும்.

வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள். கண்ணீரோடு நன்றி தெரிவிக்கிறார்கள். அந்த கண்ணீருடன் இணைந்து அவர் தம் கண்களிலே கனல் பறப்பதை அவர்தம் வாய்ச் சொற்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.

தமிழன் கொல்லப்படுகிறான், அது கேட்டு தமிழனாகப் பிறந்தவனும் இருப்பவனும் கொதிக்கிறான். இந்த செய்தி உலகத்திற்கு எட்ட வேண்டுமே என்பதற்காக தான் மனிதச் சங்கிலி. உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட; உடனே எழுக தமிழா!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+