இலங்கை தமிழர் நிவாரண நிதி-ரூ.88 லட்சம் குவிந்தது
சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி குவிந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் வரை இந்த நிதிக்கு ரூ. 88.86 லட்சம் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவியாக நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கி நேற்று இதை அவர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மாநில அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர்.
நேற்று ஒரே நாளில் ரூ. 26 லட்சம் அளவுக்கு நிதி சேர்ந்தது. இன்றும் காலை முதல் நிதி குவிந்து கொண்டிருக்கிறது.
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்தார். அருணை பொறியியல் கல்லூரி சார்பாக இ.வி. குமரன், ரூ. 10 லட்சம் நிதியளித்தார்.
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழகம், பெரியார் அறக்கட்டளை, பெரியார் பொது பிரஸ் டிரஸ்ட் மற்றும் தனது சொந்தப் பொறுப்பில் ரூ. 9.5 லட்சம் நிதியை தி.க. தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ நெப்போலியன், ஹோட்டல் சரவண பவன் அதிபர் மற்றும் ஊழியர்கள் சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
நடிகர் விவேக் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம், நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர், பத்திரிக்கையாளர் மாலினி பார்த்தசாரதி ஆகியோர் தலா ரூ. 10,000 அளித்தனர்.
பாடலாசிரியர் வாலி, துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பிஷப் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும் நிதியுதவி அளித்தனர்
இன்று பிற்பகல் வரை ரூ. 88.86 லட்சம் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
