ஜெ. பாதுகாப்பு-விவரம் கேட்கும் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம் என்ற பெயரில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

மேலும் இந்தக் கொலை மிரட்டல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுக வழக்கறிஞர்களான நவநீதகிருஷ்ணன், வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் அறைக்கு சென்று அவரிடம் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதத்தின் நகலை சமர்ப்பித்தனர்.

மேலும் அவர்கள் நீதிபதியிடம் அளித்த மனுவில், இது மிகவும் சீரியசான கடிதம். ஏற்கனவே நீதிமன்றம் ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து எஸ்பி நிலையிலான அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் வீட்டிற்கு எஸ்பி வந்து விசாரணை செய்துவிட்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த கடித நகலை உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடமும் வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கிற்கான நோட்டீசும் அரசு வழக்கறிஞரிடம் வழங்க உத்தரவிட்டார்.

கமிஷனரிடம் மனு:

இந்தக் கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனர் சேகரிடம் நேற்று மாலை மனு கொடுக்கப்பட்டது.

முன்னாள் சட்ட அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான டி.ஜெயக்குமார் கமிஷனர் சேகரை சந்தித்து இது தொடர்பாக பேசினார்.

பின்னர் மனு ஒன்றையும் கொடுத்தனர். அதில்,

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு 30ம் தேதியன்று (இன்று) ஜெயலலிதா செல்ல இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தின் மீது காவல்துறை உடனடியாக கவனம் செலுத்தி, இந்த கடிதத்தை அனுப்பியவர் யார்? இதற்கு பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உரியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், ஜெயலலிதாவுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதே மனுக்கள் தமிழக அரசின் முதன்மை உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயனும், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் நேற்று மாலையில் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் உதவி கமிஷனர் ரவீந்திரனை சந்தித்தும் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

விவரம் கேட்கும் நீதிமன்றம்:

இந் நிலையில் இன்று ஜெயலலிதாவின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாசிலாமணி, ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பிரிவுக்குரிய முழு பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது. இன்று அவர் பசும்பொன் செல்லும் நிலையில் அங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக ஜெயலலிதா கொடுத்துள்ள புகாரின் மீது உரிய போலீஸ் விசாரணை நடந்து கொண்டுள்ளது என்றார்.

ஆனால், ஜெயலலிதாவின் சார்பி்ல ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், ஜெயலலிதாவின் வீட்டுக்கு வெளியே சில லோக்கல் போலீசார் தான் நிறுத்தப்பட்டுள்ளனர். அவரது பாதுகாப்புக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு தேவை என்றார்.

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மாசிலாமணி, இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஜெயலலிதா எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்கலாம் என்றார்.

இதையடுத்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு பதிலளித்த மாசிலாமணி, அவ்வாறெல்லாம் பாதுகாப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் தாக்கல் செய்ய இயலாது. அதில் பல ரகசியங்கள் எல்லாம் அடங்கியுள்ளன. இதனால் அரசுடன் ஆலோசனை செய்துவிட்டுத் தான் விவரத்தை தாக்கல் செய்ய இயலும் என்றார்.

இதையடுத்து நவம்பர் 5ம் தேதிக்குள் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அதே தேதிக்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+