இங்கே எத்தனை குரல்கள்...!!-கருணாநிதி
சென்னை: இலங்கை விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக குரல் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.
இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்களின் ''தலைவிதி'' இது தான் என்று கடந்த கால நிகழ்வுகளையும், இக்கால நிகழ்வுகளையும் எண்ணி ஏங்கி எதிர்கால விடியல் வருமா என்று கண்ணீர் விட வேண்டியதுதான் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளாவதும், பட்டினி கிடப்பதும், அகதிகளாக அடுத்த நாடுகளுக்கு ஓடுவதும், பட்ட காயத்துக்கு மருந்து தடவிடக் கூட முடியாமல் மாண்டு மடிவதும் செய்திகளாகவும் படங்களாகவும் வந்த போது, தமிழக அரசு தலையிட்டு மத்திய அரசுக்குச் சொல்லி அந்தப் படுகொலைகளைத் தடுத்திட தக்க முயற்சிகள் எடுத்திட வேண்டாமா என்று தங்கள் அனுதாபத்தையும், ஆழ்ந்த வேதனையையும் வெளிப்படுத்தியவர்களை நானறிவேன்.
அந்தத் துயர கீதம், அவர்களின் தூய உள்ளத்திலிருந்து எழுவது என்பதும் எனக்குத் தெரியும்.
அதன் விளைவாகத் தான், இயற்கையிலேயே என் இதயமும், அதில் குருதியாக உருவாகி, ஓராயிரத்துக்கு மேற்பட்ட நாடி நரம்புகளில் புகுந்து மனிதனைக் காப்பாற்றி நடமாடச் செய்கின்ற செயலும் நான் அறியாத ஒன்றல்ல.
அன்பும், இரக்கம் காட்டிச் செயல்படும் பண்பாடும், எனக்கிருப்பது போலவே என் தமிழ் மக்களில் எண்ணற்றோருக்கு இருப்பதால் அவர்களின் ஆதரவுடன், அன்பு வாழ்த்துக்களுடன், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாத்திடும் அறப்போரின் அடுத்த அத்தியாயத்தின் ஆரம்ப கட்டமாக சென்னை மயிலை மாங்கொல்லையில் நானும் பேராசிரியரும் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றி "ஒன்றுபடுக தமிழர்களே'' என்று அழைப்பு விடுத்தோம்.
அதன் தொடர்ச்சியாகத் தான் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினோம். அவை அல்லற்படும் இலங்கைத் தமிழர்களிடையே அமைதியை உருவாக்கி அதனை நிலைப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாகும்.
அக்டோபர் 14ம் தேதிய தீர்மானங்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியாலும், பிரதமர் மன்மோகன் சிங்காலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவியும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தியாலும் எவ்வளவு மதிப்பளித்து நடைமுறைப்படுத்தப்பட முன்னெடுத்துச் செல்லப்பட்டன என்பதை அனைவரும் அறிவர்.
அதற்குக் காரணமாகவும் உந்து சக்தியாகவும் அமைந்தவை திரைப்படக் கலைஞர்கள் நடத்திய பேரணிகள், உண்ணாநோன்புகள், மாநில வரலாறு காணாத மனிதச் சங்கிலி அணிவகுப்பு போன்றவைகளாகும்.
அக்டோபர் 14ம் தேதியிலிருந்து சுமார் 15 நாட்கள், அதாவது நவம்பர் 1ம் தேதி முடிய, அனைத்துக் கட்சித் தீர்மானத்தில் "இலங்கையில் போர் நிறுத்தம்'' எனும் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கான அணுகுமுறைகளில் இந்திய நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது என்பதும் நேற்றைய என் அறிக்கையில் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக ஒன்றை சுட்டிக் காட்ட வேண்டுமென்றால் நேற்றைய காலை ஏடு ஒன்றில் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி வழங்குவது என்பதை இலங்கை அரசு தான் முடிவு செய்யும் என்று ஒரு செய்தி வந்ததும் துடித்துப் போன நான் பத்து நிமிடங்களில் கடிதம் தயார் செய்து, பிரதமருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் "பேக்ஸ்'' மூலமாக அனுப்பிவிட்டுத் தான் தலைமைச் செயலகத்திலிருந்து காரில் ஏறினேன்.
அங்கிருந்து வீடு திரும்புவதற்குள் காரிலேயே செய்தி. நமது மத்திய அமைச்சர்கள் என் கடிதத்தை நேரிலே எடுத்துச் சென்று வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கொடுத்த அடுத்த நிமிடமே ஒரு சில நிமிடங்களில், இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.
அதைப் போலவே நமது தலைமைச் செயலாளருக்கு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விளக்கமாக இலங்கையிலே உள்ள நமது இந்தியத் தூதரின் மேற்பார்வையில் செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றத்தின் துணை அமைப்பு போன்றவற்றின் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்படும் என்ற தகவல் கிடைத்தது.
இவ்வாறு அதிர்ச்சியான ஒரு செய்தி ஏட்டில் வந்த அதே நாளில் மாநில அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டு, அதற்கு சில மணி நேரங்களில் பதிலளிக்கக் கூடிய மத்திய அரசையும் நாம் பெற்றிருக்கிறோம்.
எனது முந்தைய கடிதத்தில் மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளையெல்லாம் விளக்கியிருக்கிறேன். பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமாஸ் இன்றைய நீண்ட அறிக்கையிலே கூட இறுதியாக ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டுமென்று நான் முன் மொழிந்ததை வழி மொழிகிறேன் என்று கூறியிருப்பது பெரிதும் ஆறுதலைத் தருகிறது.
மேலும் அவருடைய அறிக்கையிலே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது மத்திய அரசின் அதிகார எல்லை முதல்வருக்குத் தெரியாதா என்று கேட்டிருக்கிறார். நன்றாகத் தெரியும். தெரிந்து தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல, பதவி விலகல் குறித்து வேறு எந்தக் கட்சித் தலைவர்களும் கூறாத நிலையில் நான் தான் அந்தக் கருத்தினை முதன் முதலாகத் தெரிவித்தேன்.
அப்போது கூட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், நண்பர் தங்கபாலு, நாம் அனைவரும் பதவி விலகிவிட்டால், மத்திய அரசு அங்கே இருப்பதே கேள்விக் குறியாகிவிடும், பிறகு யாரிடம் நம்முடைய வேண்டுகோளை வைப்பது என்றெல்லாம் கேட்டார். இருப்பினும் நாம் அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக் காரணமே- அப்போதுள்ள சூழ்நிலையில் நமது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு பதவி விலக நேரிடும் என்று தான் கூறியுள்ளோம்.
அவ்வாறு நாம் தீர்மானம் நிறைவேற்றி அதனையொட்டி கழகத்தின் சார்பில் பதவி விலகல் கடிதங்கள் என்னிடம் தரப்பட்டதும் தான் இந்த அளவிற்கு வேகமாக, நம்முடைய மற்ற தீர்மானங்களை எல்லாம் ஏற்கக் கூடிய அளவிற்கும் போர் நிறுத்தம் என்ற தீர்மானத்தைக் கூட வலியுறுத்திக் கூறுவதற்கும் காரணமாக அமைந்தது.
செய்தியாளர்களின் கேள்விக்கு பங்களாதேஷ் உதாரணத்தை நான் சொன்னதையும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷ் உருவான போது அன்றைய சூழ்நிலையில் அன்னை இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மையை பெற்று யாராலும் கேள்வி கேட்க முடியாத தலைவராக இருந்தார்.தற்போதுள்ள நிலைமை அப்படியா உள்ளது?.
''பல்வேறு அறிவிப்பு களுக்கெல்லாம் சொந்தம் கொண்டாடுகிற கலைஞர் இதில் மட்டும் பாமகவை நோக்கி கையை நீட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?'' என்றும் ராமதாஸ் கேட்டுள்ளார்.
எந்த அறிவிப்புக்கும் சொந்தம் கொண்டாட நான் தயாராக இல்லை. அப்படிக் கூறிக் கொள்வதும் கிடையாது. மற்றவர்கள் கூறுவதற்கு நான் பொறுப்பல்ல. பாமகவை நோக்கி கையை நீட்டுவதற்கும் நான் பொறுப்பல்ல. பாமகவை நோக்கி கையை நீட்டுவதற்கும் நான் தயாராக இல்லை.
டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டதால் அவருக்கு பதில் சொல்ல நேரிட்டதே தவிர, அவருடைய அறிக்கைக்கு நான் பதில் தருவதும், எனக்கு அவர் பதில் தருவதும் வேண்டாத வேலை என்பது தான் என்னுடைய அபிப்பிராயம்.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, இங்கே ஒருவருக்கொருவர் பதில் கூறிக் கொண்டிருப்பது அல்ல.
மத்திய அரசின் செயல்பாடுகள் நமக்கு திருப்தியை அளிக்கின்றன. தமிழர்கள் அவதிப்படுவதை உணருகின்ற அரசும், தலைவர்களும் தான் மத்தியிலே இருக்கிறார்கள். அவர்கள் நம் உணர்வை மதிக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறார்கள்.
அதனை மேலும் அதிகமாக்குகின்ற அளவிற்கு நாம் நம்முடைய கோரிக்கைகளை எழுப்புவோம். ஆனால் இங்கே எத்தனை குரல்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நிதி திரட்டுவதையே மோசடி நாடகம், கபட நாடகம் என்கிறார். மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, நிவாரணப் பொருட்கள் வழங்குவோம் என்று கூறிவது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை என்கிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் திரட்டப்படும் நிவாரண நிதி அப்பாவி தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்கிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிவாரண உதவிகள் உண்மையில் மரணப் படுக்கையில் உள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்குப் போய்ச் சேருமா என்பதே சந்தேகம் என்கிறார்.
இத்தனை குரல்களும் வேறுபட்டு, மாறுபட்டு ஒலிக்காமல் ஒன்றுபட்டு ஒலித்திட்டால் மத்திய அரசின் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்திட உதவியாக அது அமையும் என்பது தான் என்னுடைய கருத்து.
இல்லையேல் இலங்கைத் தமிழர்களின் ''தலைவிதி'' இப்படித்தான் அமையும் போலும் என்று கடந்த கால நிகழ்வுகளையும், இக்கால நிகழ்வுகளையும் எண்ணி ஏங்கி எதிர்கால விடியல் வருமா என்று கண்ணீர் விட வேண்டியதுதான்!
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications