15 நிறுவனங்களிடமிருந்து 41 லட்சம் கலர் டிவி
சென்னை: இலவச கலர் டிவி திட்டத்துக்காக ஒரு டிவி ரூ. 2,321 என்ற விலையில், 15 நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 41.62 லட்சம் டிவிக்களை தமிழக அரசு வாங்கவுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்ற பிரதிநிதிகள் குழு கூடி இதுதொடர்பாக விவாதித்து இதற்கான ஒப்புதலை வழங்கியது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நான்காம் கட்டமாக நடப்பு ஆண்டில் ரூ. 750 கோடி செலவில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் முன்னிலையில் கடந்த 15ம் தேதி தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய டெண்டர்கள் திறக்கப்பட்டன. 17 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்றன.
இதில் குறைந்தபட்ச விலையாக ரூ.2,321யை அளித்த பி.ஜி. இன்டர்நேஷனல் நிறுவனத்தினரிடம் தொழில்நுட்ப வல்லுநர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிறுவனம், ஏற்கனவே மிகக் குறைவான விலைப்புள்ளி கொடுத்திருப்பதால் மேலும் விலையை குறைக்க இயலாது என்று தெரிவித்துவிட்டது.
இதையடுத்து டெண்டர் தாக்கல் செய்த மற்ற நிறுவனங்களை அழைத்து இதே விலைக்கு அவர்களும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்க இயலுமா என்று கேட்ட போது, எம்.ஐ.ஆர்.சி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் எல்.பி. எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய 2 நிறுவனத்தினர் மறுத்து விட்டன.
எஞ்சிய 14 நிறுவனங்கள், ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ரூ.2321க்கு வழங்க ஒப்புக் கொண்டன.
இதைத் முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் விலை ரூ.2,321 என்ற அடிப்படையில், பி.ஜி. இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகளும்,
க்ளியர் விஷன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம், கெவின் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 75 ஆயிரம், சலோரா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம், சன்டெக் விஷன் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம், டொங்குவான் யாங்கு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1,87,500,
வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம், டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்திடமிருந்து 5 லட்சம், ஏர்விஷன் இந்தியா பிரைவேட் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம், கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்திடமிருந்து 2 லட்சம்,
ஜீனஸ் எலக்ட்ரோடெக் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2.5 லட்சம், ஈஸ்ட் இந்தியா டெக்னாலஜிஸ் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம், பெல்டெக் (இந்தியா) நிறுவனத்திடமிருந்து 4 லட்சம், டிரென்ட் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 2 லட்சம், மல்கோத்ரா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள், என மொத்தம் 41,62,500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications