தினகரன் அலுவலக கொலை: அழகிரியை சேர்க்க கோரி வழக்கு
சென்னை: மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்ட 10 பேரை சேர்க்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தினகரன் அலுவலக தாக்குதலில் பலியான கோபிநாத்தின் தாயார் திலகவள்ளி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரையை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் மதுரை தினகரன் அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல். இதில் கோபிநாத் உள்ளிட்ட 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோபிநாத்தின் தாயார் திலகவள்ளி, இவ்வழக்கில், அழகிரி, மேயர் தேன்மொழி கோபிநாத் உள்ளிட்ட மேலும் 10 பேரையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட போது எனது மகன் கோபிநாத் பரிதாபகமாக உயிரிழந்தான். இந்த கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
முக்கிய குற்றவாளிகளான முதலமைச்சரின் மகன் மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி உள்ளிட்ட மேலும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் 27.7.2008 அன்று மனுத்தாக்கல் செய்தேன்.
இதன் மீதான விசாரணை 10.09.2008 அன்று வந்தது. ஆனால் எனக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. இதனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, மு.க.அழகிரி உள்ளிட்ட 10 பேர் மீது சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி மோன்கராம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என கேட்டார். அதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு மதுரை நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டது. இதனை சென்னையில் தாக்கல் செய்ய முடியாத என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வக்கீல் மனிதாபிமான அடிப்படையில் இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சென்னை கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதற்கு, மனுதாரர் போலீஸ் பாதுகாப்பு கேட்க வேண்டியதுதானே என நீதிபதி கேள்வி எழுப்பினார். புகார் மனு தாக்கல் செய்வதற்கே கொலை மிரட்டல் வருகிறது. இதில் எங்கே போலீஸ் பாதுகாப்பு கேட்பது என மனுதாரர் வக்கீல் பதில் கூறினார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ தீர்ப்புகள் இருந்தால் அதனை எடுத்துக் கூறும்படி நீதிபதி கூறினார். வழக்கை திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications