மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றிய கருணாநிதி: நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பது வேதனையாக உள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஆனந்த விகடன் இதழுக்கு நெடுமாறன் அளித்துள்ள பேட்டியில் இப்படித் தெரிவித்துள்ளார். பேட்டியின் முக்கிய பகுதிகள்...

முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டது. இப்போதோ, அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடுத்த வாக்குறுதிகள் திருப்திகரமாக இருந்தன என்கிறார் கருணாநிதி. உங்களுக்கும் திருப்தியா?

நெடுமாறன்: இது தனிமனிதர்களின் திருப்தி சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. ஓர் இனம் நிம்மதியாக ஈழத்தில் வாழ வழி பிறந்ததா என்பதுதான் முக்கியம்.

அன்று அனைத்து கட்சிக்கூட்டத்தில் பேசிய அனைவரும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்தியா அந்த நாட்டுக்கு எந்தவகையிலும் இராணுவ உதவிகள் வழங்கக்கூடாது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். அதை முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டார். அதையே தீர்மானமாகவும் கொண்டு வந்தார்.

15 நாட்களுக்குள் இதைச் செயவில்லையானால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவாகள் என்று அனைவர் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானம், அதன் நோக்கத்தை நிறைவேற்றி இருந்தால், வரலாற்றில் என்றென்றும் பேசப்பட்டிருக்கும்.

ஏனென்றால், கடந்த 40 ஆண்டு காலத்தில் ஈழப் பிரச்னை தொடர்பாக எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்-கள், அனைத்து கட்சிக்கூட்டங்கள், டெல்லி சந்திப்புக்கள் நடந்துள்ளன. ஆனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக பதவி விலக செய்வார்கள் என்று எடுக்கப்பட்ட முடிவு எடுப்பது இதுதான் முதல் முறை.

அப்படிச் செய்திருந்தால், மத்திய அரசாங்கம் கவிழ்ந்து போகும். அந்த முடிவைக் கேட்டு உலகமெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் பெரும் நம்பிக்கை கொண்டார்கள். டெல்லியும் அதிர்ச்சி அடைந்தது. கொழும்பில் இருக்கும் சிங்களக் கட்சிகள் அச்சப்பட்டன. ஆனால், அனைத்தும் வீணானதுதான் பிரணாப் முகர்ஜி சந்திப்பால் கண்ட பலன்!

கருணாநிதியின் பதவி விலகல் அறிவிப்பு, போராட்டங்களால்தானே சிறிலங்கா அரசின் அரசின் தூதுக்குழு டெல்லி வந்தது. அது சாதகமானதுதானே?''

நெடுமாறன்: அதனால் என்ன பயன் ஏற்பட்டது? இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்களைக்கொண்ட உயர்மட்டக்குழுவை அனுப்பப் போவதாக சிறிலங்கா அறிவித்தது. ஆனால், அமைச்சர்கள் யாரும் வரவில்லை. இந்தியா போன்ற பலம் வாய்ந்த வல்லரசு நாடு அழைக்கும்போது, சிறிலங்காவின் அரச தலைவரோ, பிரதமரோ, டெல்லிக்கு வந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் வெளிநாட்டு அமைச்சராவது வந்திருக்க வேண்டும். ஆனால், பிரதமரின் ஆலோசகர் என்ற பொம்மை பதவியில் இருக்கும் பசில் ராஜபக்ச இங்கு அனுப்பப்பட்டார். வல்லரசான இந்தியாவைச் சின்ன நாடான சிறிலங்கா அதிகாரபூர்வமாக அவமானப்படுத்தியது.

முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லாத பசில் ராஜபக்சவை அனுப்புவதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று சிறிலங்கா வெளிப்படையாகச் சொல்லிவிட்டது. மூன்றாம் தரமான ஒரு நபர் அனுப்பப்பட்டபோது, அவரை மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜி சந்திக்கலாமா? மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரைச் சந்திக்க மன்மோகன்சிங்கின் ஆலோசகர்தான் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா கடுமையாக இருக்கிறது என்பதையாவது சிறிலங்கா உணர்ந்திருக்கும்!

பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையாலும் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?

நெடுமாறன்: முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின், நிருபர்களைச் சந்தித்தார் பிரணாப் முகர்ஜி. போர் நிறுத்தம் பற்றியோ, சிறிலங்காவுக்கு இந்தியா செய்துவரும் இராணுவ உதவிகள் பற்றியோ எதையும் அவர் பேசவே இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு தீர்மானங்களைப்பற்றி அவர் வாயே திறக்கவில்லை. எதை வைத்து பிரணாப் முகர்ஜி கூறியது தனக்குத் திருப்தி தருவதாக கருணாநிதி சொல்கிறார் என்றும் புரியவில்லை. அப்படி கருணாநிதி சொல்வதே, அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவுகளுக்கு எதிரானதாகும்.

அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? 'இது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்த தீர்மானம். இதில், நானாக தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே, மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து, எங்கள் முடிவை உங்களுக்குச் சொல்கிறேன்' என்றுதான் பிரணாப் முகர்ஜியிடம் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாததால், அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் கருணாநிதியால் அர்த்தமற்றதாக்கப்பட்டு விட்டன. உலகத் தமிழர்களை மீண்டும் ஒரு முறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை!

40 ஆண்டு பிரச்சினையை 4 நாட்களில் தீர்த்துவிட முடியாது என்கிறாரே அவர்?

நெடுமாறன்: இது வேதனை தரத்தக்க பதில்!

40 ஆண்டுப் பிரச்சினையைத் தீர்க்க நாளாகும் என்பது உண்மைதான். ஆனால், போரை நிறுத்துங்கள் என்று சொல்லி நிறுத்த, சில மணி நேரமே போதும்.

சிங்களவர் கைவசம் இருந்த ஆனையிறவு முகாமைக் கைப்பற்றிய புலிகள், யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினார்கள். அங்கு 30 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்கள் அப்போது இருந்தார்கள். புலிகள் முன்னேறியிருந்தால், சிங்கள இராணுவ வீரர்கள் மொத்தமாக அழிந்திருப்பார்கள். அப்போது இந்தியா தலையிட்டு, புலிகளை முன்னேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. புலிகளும் சம்மதித்தார்கள்.

அன்று, சிங்களச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக புலிகளிடம் கோரிக்கைவைக்கத் தெரிந்த இந்தியாவுக்கு, இன்று அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற போர் நிறுத்தம் செய்யவைக்க சில நிமிடங்கள் போதாதா? எவ்வளவு வேதனையான பதில்!

ஒரு நாடு, பக்கத்து நாட்டுக்கு இராணுவ உதவி செய்வது சாதாரணமானதுதான் என்கிறாரே பிரணாப்?

நெடுமாறன்: சாதாரண காலத்தில், சாதாரணமாக உதவி செய்யலாம். ஆனால், ஒரு நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு தரப்புக்கு மட்டும் ஆயுத உதவிகள் செய்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

காஷ்மீரில் இராணுவத்துக்கும் சில அமைப்புகளுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கிறது. அந்த அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை இந்தியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், இலங்கையில் சிங்களவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்கிறது. பிறகு எப்படி பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்ட முடியும்?

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிப் பொருட்கள் அனுப்ப முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது தானே?

நெடுமாறன்: மருந்து மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிக்கலாம். ஆனால், யார் மூலமாகக் கொடுப்பீர்கள்? சிறிலங்கா அரசாங்கத்திடம் கொடுப்போம் என்பது தெரிந்தே செய்யும் தவறு. தமிழர் பகுதியில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. தொண்டு அமைப்புகளை வெளியேற்றியவர்கள் அவர்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்கள் தமிழர்களுக்குப் போய்ச் சேராது. விரக்தியாக இதைச் சொல்லவில்லை. அனுபவ உதாரணம் இருக்கிறது.

ஆழிப்பேரலையால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்தார்கள். மிகப்பெரிய அளவில் அழிவும் ஏற்பட்டது. இதற்கு உலக நாடுகள் பல்லாயிரம் கோடி பணத்தைக் கொட்டியது. இந்தப் பணத்தை வைத்து நிவாரண உதவிகள் சரியாக நடக்கின்றனவா என்று பார்க்க, நோர்வே நாட்டைத் தலைவராக ஏற்று, சிங்கள - புலிகள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அதை சந்திரிகா ஏற்கவில்லை. ஒரு கைப்பிடி உதவிப் பொருள்கூட தமிழர் பகுதிக்குள் வரவில்லை.

ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனான், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வந்தபோது, தமிழர் பகுதிக்குள் செல்ல சிறிலங்கா அரசாங்கம் விடவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் பொருளைக் கொடுத்தால், தமிழர்களுக்குக் கொடுக்கமாட்டார்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்பு மூலமாகத்தான் வழங்க வேண்டும். அதை தமிழகக் குழு கண்காணிக்க வேண்டும்!

தமிழர் தாயகம், சுயநிர்ணயம் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜெயலலிதா முதலில் அறிக்கைவிட்டார். மறுநாளே மாறி அறிக்கைவிட்டாரே?

நெடுமாறன்: தமிழ் மக்களின் கொந்தளிப்பை பார்த்து முதலில் அப்படி அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்து அவரைப் பார்த்தார்கள். அதன் பிறகு மாறிவிட்டார். காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அவரும் திட்டமிடுகிறார். அதுதான் உண்மை.

கருணாநிதி, சிறிலங்காவுக்கு வரவேண்டும் என்று ராஜபக்ச அழைப்பு விடுகிறாரே?

நெடுமாறன்: சிங்களத் தலைவர்கள் அத்தனை பேரும் நரித்தந்திரம் படைத்தவர்கள். அதில் ராஜபக்ச விதிவிலக்கல்ல. உலகத்தை ஏமாற்ற அவர்கள் அப்படித்தான் ஆரம்பத்தில் பேசுவார்கள். அதன் பிறகு நம்மை ஏய்த்து விடுவார்கள்.

புலிகளை எதிர்த்து தமிழக காங்கிரசார் கொந்தளிப்புடன் பேச ஆரம்பித்து உள்ளார்களே?

நெடுமாறன்: மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அந்நியப்பட்டுக்கொண்டே போகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதுதான் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் மையக் கருத்து. அந்த இரண்டு மாகாணங்களையும் பிரித்துவிட்டார் ராஜபக்ச. ஆகவே, ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற முதலில் அவர்கள் குரல் கொடுக்கட்டும்.''

இன்றைய நிலையில் உங்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்ன?

நெடுமாறன்: மூன்று விடயங்கள்... அப்பாவித் தமிழர்களைப் பலியிடும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இந்திய அரசு, சிறிலங்காவுக்கு தரும் இராணுவ உதவியை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டால் இந்திய கடற்படை திருப்பித் தாக்கும் என்று அறிவிக்க வேண்டும்.

இங்கே... முதல்வர் கருணாநிதி, உடனடியாக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நமது அரசியல், அபிப்பிராய பேதங்களை அப்பாவித் ஈழத் தமிழனின் வாழ்க்கையுடன் சேர்த்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+