உசிலம்பட்டியில் இன்றும் வன்முறை-பஸ்கள் மீது கல்வீச்சு
உசிலம்பட்டி: சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரி உசிலம்பட்டியில் இன்றும் மோதல் நடந்தது. பள்ளி மாணவர்கள் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால், அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்து மதுரை, உசிலம்பட்டியில் நேற்று வன்முறை வெடித்தது. மதுரையில் பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. உசிலம்பட்டியிலும் பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று காலை உசிலம்பட்டியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
இதனால் மாணவர்கள் சிதறி ஓடினர். வெளியில் வந்த மாணவர்கள், கடும் கோபத்துடன் சாலையில் சென்ற வாகனங்களை கல்வீசித் தாக்கினர். இதில் நான்கு பேருந்துகள் சேதமடைந்தன.
பின்னர் போலீஸார் மாணவர்களை விரட்டிப் பிடித்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்து. அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த வன்முறையைத் தொடர்ந்து உசிலம்பட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications