என் 'நண்பரை' கைது செய்ய வேண்டும்-இளங்கோவன்
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரியவில்லை என மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட சில எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குறித்து விவாதித்தோம்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எனது அருமை நண்பர். அவர் புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருவது மட்டுமல்லாது புலிகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்றும் பேசி வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரியவில்லை என்றார் இளங்கோவன்.
தங்கபாலு கூறுகையில்,
இன்று நடைபெற்ற கூட்டத்தைப் போல தொடர்ந்து கூட்டங்கள் நடைபெறும். அதற்கு பிறகு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.
காங்கிரசை குறை கூறுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பிரபாகரன் கொலை குற்றவாளி இல்லை என்று பேசி வருகிறார். அதை நீதிமன்றத்தில் கூற வேண்டியது தானே? வெளியே மட்டும் ஏன் அப்படி பேச வேண்டும்? என்றார்.












Click it and Unblock the Notifications