26 சட்ட மாணவர்கள் சஸ்பெண்ட்-புதிய முதல்வர் அதிரடி

சென்னையில் டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய முதல்வராக முகமது இக்பால் நியமிக்கப்பட்டார்.
முதல்வராக பொறுப்பேற்றவுடன் கல்லூரியில் நடக்கும் அரசியல், ஜாதி மோதல் குறித்து ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களிடம் விவாதித்தார் இக்பால்.
இதையடுத்து இந்த மோதலுக்கு வித்திட்ட 26 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை, சித்திரைச் செல்வன் ஆகியோரும் அடங்குவர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் கல்லூரி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அட்வகேட் ஜெனரல் நியமனம்:
இதற்கிடையே சட்டக் கல்லூரி மற்றும் அதன் விடுதியின் செயல்பாடுகளை ஆராய அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
கல்லூரிக்குள் நடந்த வன்முறை, அதை போலீசார் வேடிக்கை பார்த்தது ஆகியவை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.
நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்,
மோதல் தொடர்பாக மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை சரியான முறையில் துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
இந்த கோர்ட்டுக்கு உதவ அட்வகேட் ஜெனரலும், சென்னை சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான சீனியர் வக்கீல் ஜி.மாசிலாமணி நியமிக்கப்படுகிறார்.
இவர் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் சட்டக் கல்லூரியிலும், விடுதியிலும் சென்று விசாரணை நடத்த வேண்டும்.
ஆசிரியர்கள், ஊழியர்கள் விவரத்தையும், இக்கல்லூரிக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது, எந்த முறையில் செலவு செய்யப்படுகிறது, ஆசிரியர்களின் தகுதி, வகுப்பறைகள் நிலைமை, விடுதி என்ன நிலைமையில் உள்ளது, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட முதல்வர், தற்போதைய முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரிக்க வேண்டும்.
இந்த விசாரணைக்கு கல்லூரி முதல்வர், துணைவேந்தர், மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு குறை இருந்தால் அதை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். குறைகளை தெரிவித்த மாணவர்களை நேரில் அழைத்தும் விசாரிக்கலாம். இந்த விசாரணைக்கு மாணவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். முழுமையான விசாரணை நடத்திய பிறகு, பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் வரும் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது












Click it and Unblock the Notifications