அதிமுக-இ.கம்யூ கூட்டு: கருத்து கூற சுவாமி மறுப்பு
சென்னை: இலங்கை பிரச்சனையில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே சன் டிவியுடனான பிரச்சனையையும் தனது குடும்ப பிரச்சனையையும் முதல்வர் கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி கொள்கை மற்றும் அரசியல்ரீதியாக பல்வேறு தோல்விகளை சந்தித்து வருகிறார்.
இலங்கை பிரச்சனையில் எம்.பிக்கள் ராஜினாமா என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டார். தமிழக சட்டப் பேரவையிலும் இந்த பிரச்சனை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு மத்திய அரசுக்கு எதிராக பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. இந்த முறைகேட்டில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு. இவற்றையெல்லாம் மறைப்பதற்காகவும், மக்களை திசை திருப்புவதற்காகவும் தான் குடும்பப் பிரச்சனையை கருணாநிதி கிளப்பியிருக்கிறார்.
சன் டிவி, அறிவாலயத்தை விட்டு வெளியேறிய போது, கட்டிடங்களை சேதப்படுத்திவிட்டதாக உண்மைக்கு மாறான தகவல்களை கருணாநிதி வெளியிட்டுள்ளார். ஆனால் அறிவாலயத்தில் இருந்து சன் டிவி வெளியேறிய போது, அந்த அலுவலகம் எப்படி இருந்தது என்பது வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தேவையின்றி இந்த பிரச்சனையை கருணாநிதி பெரிதுபடுத்தி வருகிறார்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஸ்வான் மற்றும் இன்டெக் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இது குறித்து மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைச்சர் ராஜாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு ராஜா அளித்துள்ள பதிலில் சரியான தகவல்கள் இல்லை. இந்த முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு ரூ. 50,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி குடும்பத்தினருக்கும், சில காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் ரூ. 2,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்த இமாலய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட வேண்டும். மத்திய கண்காணிப்பு ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை கோரி நீதிமன்றத்தை அணுகுவேன்.
இந்துத்துவ சக்திகளை தீவிரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளது. இந்துக்களிடையே உருவாகிவரும் ஒற்றுமை உணர்வை குலைக்க திட்டமிட்டுள்ளது காங்கிரஸ்.
மோட்டார் சைக்கிள் ஒன்றை ஆதாரமாக கொண்டு பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளை அவர் ஏற்கனவே விற்பனை செய்து விட்டதற்கான ஆதாரம் உள்ளது.
சிறுபான்மையினரிடையே இந்த ஆட்சி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே ஓட்டு வங்கியை தக்கவைத்து கொள்வதற்காக இந்த செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றார் சுவாமி.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பது பற்றி கேட்டதற்கு, ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்தால் அதன் மீது நான் என்ன கருத்து கூற முடியும் என்றார் சுவாமி.
அவரும் ஒரு பத்திரி்க்கையாளரும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிகள் எடுபடாததால் தான் பாஜக தலைவர் அத்வானியை ரஜினியிடம் அழைத்துச் சென்று சந்திக்க வைத்தார் அந்த பத்திரிக்கையாளர். ஆனால், எனக்கு இப்போதைக்கு அரசியல் ஐடியா இல்லை என்று கூறி ரஜினி நைசாக நழுவிவிட்டார்.












Click it and Unblock the Notifications