ராணுவ முற்றுகையில் கிளிநொச்சி: மாவீரர் தின உரை நிகழ்த்துவாரா பிரபாகரன்?

வரும் 26ம் தேதி பிரபாகரனுக்கு 54வது பிறந்த நாள். இந்த நாளை ஆண்டுதோறும் மாவீரர் தினமாக விடுதலைப் புலிகள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, மிகுந்த நெருக்கடியான சூழலில் உள்ளனர் புலிகளும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசமும்.
கடந்த 1972ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அன்றுதான் அந்த அமைப்பின் முதல் நபரை ராணுவம் கொன்றது. அதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் கடைசி வாரத்தை மாவீரர்கள் வாரமாக விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்கின்றனர்.
இந்த தினத்தை விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பாவிக்கின்றனர். அன்று விடுதலைப் புலிகளுக்கு புதிய கட்டளை பிறப்பிக்கும் வகையில் எழுச்சியுரை ஆற்றுவது பிரபாகரன் வழக்கம். எனவே, இந்த வாரத்தில் மிகப் பெரிய அளவில் விடுதலைப் புலிகளின் பதிலடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இம்முறை கிளிநொச்சிக்கு வெளியே ராணுவம் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நகரைக் கைப்பற்ற ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கிறது. மன்னாரில் இருந்து கிளிநொச்சியின் மூன்று எல்லை வழியாக ராணுவத்தின் 1 மற்றும் 57வது படைப் பிரிவுகள் முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த முறை பிரபாகரன் பிறந்த தின உரையாற்ற விடமாட்டோம் என்றும் ராணுவத் தரப்பில் சவால் விடுத்துள்ளனர். இதுகுறித்து போஸ்டர்களையும் தமிழர் வாழும் பகுதிகளில் ஒட்டி வருகிறது ராணுவம்.
இலங்கையில் போர் நடைபெறும் வடக்கு பகுதிக்குள் செல்ல பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு இலங்கை அரசு தடை விதித்து இருக்கிறது. எனவே, அங்கு உள்ள உண்மை நிலவரத்தை முழுமையாக அறிய முடிவதில்லை.
கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, விடுதலைப் புலிகளும் கடும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிகிறது. எனவே, ராணுவத்தினர் தரைவழிப் போரைவிட்டுவிட்டு விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.
கிளிநொச்சியின் புறநகர் பகுதியில் ராணுவம் முகாமிட்டு இருப்பதாகவும், அந்த இடங்கள் வரை கைப்பற்றி விட்டதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோல கிளிநொச்சியில் உள்ள கோகாவில் பகுதியிலும் ராணுவம் போரிட்டு வருகிறது. ஏ-9 நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறிச் செல்வதாக செய்திகளை அனுப்பிய வண்ணமுள்ளது ராணுவம்.
விடுதலைப் புலிகள் வலிமையாக இருக்கும் முல்லைத் தீவிலும் அந்தன்குளம் பகுதியிலும் கூட ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதாக்க் கூறப்படுகிறது.
அக்கராயன்குளம், நிவில் ஆகிய பகுதிகளை புலிகளிடமிருந்து கைப்பற்றி விட்டதாக ராணுவம் தெரிவித்தாலும், இன்னும் அங்கு கடும் சண்டை நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் கிலாலி, முகமாலை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ராணுவத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வெளியுறவு மந்திரியும், அதிகாரப்பூர்வ ராணுவ செய்தி தொடர்பாளருமான கெகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது:
எந்தவொரு போர் நிறுத்த அறிவிப்பு வெளியாவதாக இருந்தாலும், அதற்கு முன்பாக தீவிரவாத குழுக்கள் முற்றிலுமாக ஆயுதங்களை கைவிட வேண்டும். விடுதலைப் புலிகள் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பதற்கு இலங்கை அரசு முட்டாள் அல்ல. ஆயுதங்களை அவர்கள் முற்றிலுமாக கைவிட்டால் போர் நிறுத்தம் குறித்து நாங்கள் பரிசீலிப்போம்.
தற்போது (நேற்று) கிடைத்த தகவலின்படி, கிளிநொச்சி அருகில் உள்ள வடக்கு அடம்பன், தெற்கு அடம்பன் மற்றும் தெருமுறிகண்டி ஆகிய இடங்களில் கடுமையான சண்டை நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications