வெளியுறவு-ஹில்லாரி; பாதுகாப்பு அமைச்சர்- கேட்ஸ்
சிகாகோ: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹில்லாரி கிளிண்டனும், பாதுகாப்புத்துறை அமைச்சராக ராபர்ட் கேட்ஸும் செயல்படுவார்கள் என அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமா தெரிவித்துள்ளார்.
கேட்ஸ் இப்போது புஷ் நிர்வாகத்திலும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத்துறை அமைச்சரை மாற்றுவது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தேவையில்லாத தொய்வை ஏற்படுத்தும் என்பதால் அவரையே தனது நிர்வாகத்திலும் பாதுகாப்பு அமைச்சராக தொடரச் செய்ய முடிவு செய்துள்ளார் ஒபாமா.
இருப்பினும், தனக்கும் ஹில்லாரிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று ஓபாமா தெரிவித்துள்ளார்.
ஹில்லாரி, கேட்ஸ் நியமனம் குறித்த அறிவிப்பை சிகாகோவில் வெளியிட்டு பேசிய ஓபாமா, உறுதியாக செயல்படுபவர்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. எனவேதான் இந்த இரு உறுதியான நபர்களை நான் முன்மொழி்ந்துள்ளேன்.
ஹில்லாரி கிளிண்டன் எனது தோழி. எனது நோக்கங்களையும், கொள்கைகளையும் இந்த குழு எடுத்துச் செல்லும். எனது முடிவுகளை இவர்கள் திறம்பட நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.
ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள், நான் பதவியேற்ற அடுத்த 16 மாதங்களில் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்படும். இதுகுறஇத்து நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கவுள்ளேன் என்றார்.
ஹில்லாரி கூறுகையில், வெப்பமயமாதல், தீவிரவாதம் உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகளில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும். இந்த விஷயத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தன்னிச்சையான போக்கு என்ற கொள்கை ஓபாமா தலைமையிலான அரசிடம் இருக்காது.
அமெரிக்காவின் இறையாண்மையும், சுதந்திரமும் கட்டிக் காக்கப்படும்.
பாரக் ஓபாமாவை புதிய அதிபராகத் தேர்வு செய்துள்ளதன் மூலம் அமெரிக்க மக்கள் புதிய கோணத்தில் நடைபோடத் தொடங்கியுள்ளனர். சாதகமான மாற்றத்திற்கான வலிமையான அமெரிக்காவை உருவாக்க தொடங்கியுள்ளனர்.
செனட் உறுப்பினர் பொறுப்பிலிருந்து மாறி, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தாங்கிப் பிடிக்கும் பணிக்குச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ஹில்லாரி.
ஹில்லாரி, கேட்ஸ் தவிர ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான ஜேம்ஸ் ஜோன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார். அரிஜோனா ஆளுநர் ஜேனட் நெபோலிடானோ உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருப்பார்.
முன்னாள் நீதித்துறை அதிகாரி எரிக் ஹோல்டர் அட்டர்னி ஜெனரலாகவும், சூசன் ரைஸ் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராக செயல்படுவர்.
இவர்களின் நியமனத்தை விரைவில் செனட் கமிட்டி அங்கீகரிக்கும்.












Click it and Unblock the Notifications