தேர்தல்: தேமுதிகவுக்கு நல்ல வாய்ப்பு-எஸ்வி.சேகர்
சங்கரன்கோவில்: தேமுதிகவை அனைவரும் குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள். ஆனால் லோக்சபா தேர்தலில் தேமுதிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் நடிகர் எஸ்வி சேகர் எம்எல்ஏ தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
நான் கடந்த 2006ம் ஆண்டு சங்கரன்கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். அதன் பின்னரே மைலாப்பூர் தொகுதி வேட்பாளராக ஜெயலலிதா என்னை அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனேன்.
அதே போல தற்போது வழிபட்டு செல்கிறேன். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எம்பியாகி பாராளுமன்றம் செல்வேன். இது உறுதி. ஆனால் எந்த கட்சி சார்பில் எம்பி ஆவேன் என்பது கடவுளுக்கு தெரியும்.
நான் அதிமுக எம்எல்ஏவாகதான் இருக்கிறேன். ஜெயலலிதா எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவருக்கும், எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாளை நான் எந்த கட்சிக்கு போனாலும் அவர் மீதுள்ள அன்பு குறையாது.
அதிமுகவில் என்னை ஓரம் கட்டுகின்றனர் என்பது உலகறிந்த செய்தி. அதனால் எனது எம்எல்ஏ பதவிக்கு தான் பாதிப்பே தவிர என்னை ஒன்றும் பாதிக்காது.
பகுஜன் சமாஜ் கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிராமணர்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு தருவதாக கூறியுள்ளனர். பிராமணர்கள் ஜாதி சண்டையில் ஈடுபடுவதில்லை.
பிராமண அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சிலர் குறைவாக மதிப்பீட்டுள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் முக்கிய பங்கு வகிப்பார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications