பாக்.குக்கு ஆதரவு-ஐ.நாவில் முட்டுக்கட்டை போட்ட சீனா
டெல்லி: நான்கு மாதங்களுக்கு முன்பே ஜமாத் உத் தவா அமைப்பைத் தடை செய்ய ஐ.நா.வில் அமெரிக்கா முயன்றபோது, அதற்கு சீனா முட்டுக்கட்டையாக இருந்தது இப்போது வெளியாகியுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ரஷீத் டிரஸ்ட், அல் அக்தர் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மற்றும் ஜமாத் உத் தவா அமைப்பைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகள் ஆகியோரை தடை செய்யவும், அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கவும் தனி நபர் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்தது.
அமெரிக்கா தடை கோரிய நபர்கள் - லஷ்கர் நிறுவனர் ஹபீஸ் சயீத், ஜாகி உர் ரஹ்மான் லக்வி, ஹாஜி முகம்மது அஷ்ரப், மஹமூத் முகம்மது அகமது பாஸிக் ஆகியோர். (இவர்களைத்தான் தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்து, சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது)
இவர்களில் ஹாஜி அஷ்ரப் லஷ்கர் அமைப்பின் நிதிப் பிரிவின் தலைவர் ஆவார். இவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். இவர்தான் லஷ்கர் அமைப்புக்குத் தேவையான நிதியை அள்ளி அள்ளி கொடுப்பவர்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த அந்த தீர்மானத்தில், இந்த நான்கு பேருடைய சொத்துக்களை முடக்கவும், அவர்களுக்குத் தடை விதிக்கவும், சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கவும் கோரப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இவர்கள் மீது தடை விதிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது. இந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் களம் இறங்கியது.
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்பதால், அதைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்காக, நான்கு பேரின் பெயர்களையும் தடைப் பட்டியலில் சேர்க்க விடாமல் தடுத்து நிறுத்தி விட்டது சீனா.
இதற்காக அது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக, படு டெக்னிக்கலாக, பெயரை மாற்றிக் கொண்டதால் மட்டும் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று கூறி விட முடியாது. அதை நிரூபிக்கும் ஆதாரம் தேவை என்று கூறி அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறாமல் நிறுத்தி விட்டது சீனா.
இதில் என்ன கொடுமை என்றால், ஜமாத் உத் தவா என்று பெயரை மாற்றிக் கொண்ட லஷ்கர் அமைப்பு, சமூக சேவை செய்து வருவதாக பாகிஸ்தான் கூறியதுதான். மேலும் சயீத், லக்வி உள்ளிட்டோர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் என்றும் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானும், சீனாவும் கூறியுள்ளன.
இப்படி எந்த வகையிலும் தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள் என்று நிரூபிக்க முடியாத ஒரு காரணத்தை முன வைத்து லஷ்கர் அமைப்பு மீதான தடை மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சயீத் உள்ளிட்டோரை சேர்க்கும் அமெரிக்க முயற்சிக்கு சீனா தடை போட்டு விட்டது.
இதன் விளைவு என்னவென்றால், சயீத்துக்கு பாகிஸ்தான் அரசு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கியதுதான். சமீபத்தில், தனது சொந்த பாதுகாப்புக்காக புல்லட் புரூப் உடைகளை வெளிநாட்டிலிருந்து தருவித்துக் கொள்ள சுங்க வரி விலக்கை சயீத்துக்கு பாகிஸ்தான் அரசு அளித்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications