உண்ட மயக்கத்தில் போலீஸ்-தப்பிய கைதிகள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கிளைச் சிறையில் கறிச் சோறு சாப்பிட்டு உண்ட மயக்கத்தி்ல் சிறைக் கதவுகளைத் திறந்து வைத்து, 3 ஆயுள் தண்டனைக் கைதிகள் தப்ப வழி செய்துள்ளனர் திருச்செந்தூர் போலீஸார்.
திருச்செந்தூர் கிளை சிறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜோசப் கடந்த ஜூன் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி அன்று இரவு அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
இதில் கிளை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முத்து கிருஷ்ணன், தலைமை வார்டன் நடராஜ பெருமாள், வார்டன்கள் ஜெயக்குமார், பாரத் கென்னடி, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறை வாளகத்திலேயே அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.
சமையல் வேலையில் ஈடுபடுவதற்காக 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் முத்து செல்வம், பட்டு ராஜா, மகாராஜன் ஆகியோர் திறந்து விடப்பட்டனர்.
அதன்பிறகு சமையல் முடிந்து அனைவருக்கும் அசைவ உணவு பறிமாறப்பட்டது. இவை அனைத்தும் முடிந்தவுடன் பாதுகாப்பு பணியில் இருந்த அனைவரும் உண்ட மயக்கத்தில் தூங்கினர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மூவரும் தப்பியோடி விட்டனர்.
கைதிகள் தப்பியோடி நேரத்தில் பணியி்ல் இருந்த தலைமை வார்டன் நடராஜ பெருமாள், வார்டன்கள் ஜெயக்குமார், பாரத் கென்னடி, வேல்முருகன் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ள கைதிகள் பட்டுராஜா, முத்து செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications