வீட்டுக் காவலில் ஹபீஸ் சயீத்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஜமாத் உத் தவா அமைப்பைத் தடை செய்தது. மேலும் லஷ்கர் இ தொய்பா நிறுவனர் சயீத், மும்பைத் தாக்குதலின் மூளையான லக்வி உள்ளிட்ட நான்கு லஷ்கர் அமைப்பினரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.
இதையடுத்து அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ஜான் நெக்ரோபான்டே இஸ்லாமாபாத் விரைந்தார். பிரதமர் கிலானியை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஷரத்துக்களை பாகிஸ்தான் கவனத்தில் கொண்டுள்ளது. அதில் உள்ளவை அப்படியே நிறைவேற்றப்படும். ஜமாத் உத் தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசும் தடை விதிக்கும். மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் சிலர் மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் பாகிஸ்தான் நிறைவேற்றும் என்று உறுதியளித்தார்.
மேலும், இந்தியாவுடன் சுமூக உறவை மேற்கொள்வதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அதில் பாகிஸ்தான் அக்கறையுடன் உள்ளதாகவும் ஜானிடம் கிலானி தெரிவித்ததாக பாகிஸ்தான் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தணிக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் ஜானிடம், கிலானி விவரித்தார்.
இதையடுத்து ஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. அதன் சொத்துக்களும் முடக்கப்பட்டன. வங்கிக் கணக்குகளும் முடக்கி சீல் வைக்கப்பட்டன.
ஜமாத்தின் தலைவரான ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications