இந்திய மாணவரைக் கொலை செய்த 5 ரஷ்யர்கள் கைது
மாஸ்கோ: கடந்த 2006ம் ஆண்டு இந்திய மாணவர் நிதேஷ் குமார் சிங்கைக் கொலை செய்த வழக்கில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 5 ரஷ்யர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் 6ம் ஆண்டு படித்து வந்த மாணவர்தான் நிதேஷ்குமார் சிங்.
2006ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி கல்லூரி விடுதியில் வைத்து சிங் கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு படித்து வந்த வெளிநாட்டு மாணவர்கள், இன வெறியால் நடந்த இந்த கொலையைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இது ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்தவர்கள்தான் அதிபர் மெத்வதேவ் மற்றும் பிரதமர் புடின் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய மாணவர் கொலை வழக்கை ரஷ்ய அரசு தீவிரமாக விசாரித்து வந்தது.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெவ்ஸ்க் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 ரஷ்யர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கைதான மாணவர், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் வரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற நால்வரில் ஒருவர் வேறு ஒரு குற்றத்தின் கீழ் கைதாகி தண்டனை பெற்று அதை அனுபவித்து வருகிறார்.
ஐரோப்பியர் அல்லாத மாணவர்கள் மீது ரஷ்ய இனவெறியினர் தாக்குதல் நடத்துவது ரஷ்யாவில் அதிகரித்து வருகிறது. இதை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications