புது டாஸ்மாக் கடைகள் இல்லை-இரவு 10 மணியுடன் மூடல்!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், தலைமைச் செயலகத்தில், நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்தார்.
கடந்த இரண்டாண்டுகளில் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்கள் (பார்கள்) மூடப்பட்டுள்ளன. அதேபோல 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
விற்பனை நேரம் குறைப்பு:
மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற் கட்டமாக இனி புதிய மதுக் கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருப்பதிலும், ஒரு மணி நேரம் குறைத்து 2009ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே செயல்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இனி அடுத்தடுத்த கட்டங்கள் பற்றி அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்புக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1952ம் ஆண்டு (அப்போதைய சென்னை மாகாணத்தில்) முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார்.
பின்னர் 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரானபிறகும் கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.
அண்ணா மறைவுக்குப் பின்னர், 1971ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, 1972ம் ஆண்டு மது விலக்கு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு சாராயக் கடைகளுக்கும் அனுமதி தந்தார் எம்ஜிஆர். அதையடுத்து தமிழகத்தில் மது விலக்குக் கொள்கை நிலையானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications