பாகிஸ்தான் போவது ஆபத்து-இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை
டெல்லி: பாகிஸ்தான் போவது ஆபத்தானது. எனவே இந்தியர்கள் பாகிஸ்தான் பயணத்தை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விமானத் தாக்குதலை நடத்தலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பதட்டம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், லாகூரில் நடந்த ஒரு கார் குண்டுவெடிப்புக்கு சதீஷ் ஆனந்த் சுக்லா என்ற இந்தியர்தான் காரணம் என்று கூறி திசை திருப்பும் நாடகத்தை அரங்கேற்றியது பாகிஸ்தான்.
இதையடுத்து, இந்தியர்கள் பாகிஸ்தான் போவதை தவிர்க்க வேண்டும். அது அபாயகரமானது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை அறிவுரைச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாகூர், முல்தான் நகரங்களில் கடந்த 2 நாட்களில் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக அங்குள்ள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து லாகூரில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
எனவே அரசின் கட்டுப்பாட்டையும், சட்டத்தையும் மீறி செயல்படும் பிற அமைப்புகள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
ஆகவே பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்வதும், அங்கு இருப்பதும் பாதுகாப்பானது அல்ல என்பதால் இந்தியர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு போக வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
