பெற்றோர் சண்டை: சிறுவன் உறுப்பு தான முயற்சி தோல்வி
சென்னை: தாய், தந்தையின் சண்டையால், அவர்களது 8 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாமல் போய் விட்டது. சிறுவனின் உறுப்புகள் செயலிழந்து விட்டதால் அவற்றை எடுக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் நாஞ்சில் வளவன் (8). தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.
சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிறுவனது மூளை செயல் இழந்து விட்டதால் அவனை காப்பாற்ற முடியாது என்று அறிவித்தனர். இதனால் சிறுவனின் தாயும் அவனது உறவினர்களும் அவனது உடல் உறுப்பை தானம் செய்ய முன் வந்தனர்.
இதையடுத்து சிறுவன் உயிருடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டான். வளவனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், தந்தையின் அனுமதியும் இருந்தால்தான் சிறுவனின் உடல் உறுப்பை தானம் செய்யலாம் என்று கூறினர்.
சிறுவனின் தந்தை இவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். உடனடியாக அவருடன் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, மனைவி மற்றும் குடும்பத்தினர் இதை பற்றி என்னிடம் எதுவும் கூறாததால் இதை அனுமதிக்க முடியாது. மேலும் என் மீது கீதா தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற்றால்தான் வளவனின் உறுப்பு தானத்திற்கு சம்மதிப்பேன் என்றும் கூறி விட்டார்.
இந்த நிலையில் சிறுவனின் உடல் உறுப்புகள் செயலிழந்து வந்தன. தற்போது வளவனின் உடல் உறுப்புகள் எடுத்து பயன்படுத்த முடியாத அளவுக்கு செயலிழந்து விட்டன.
எனவே அந்த உறுப்புகளை இனி யாருக்கும் மாற்ற முடியாது என டாக்டர்கள் அறிவித்தனர். சிறுவனின் உடல் உறுப்புகளை வைத்து 5 பேரின் உயிரை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் இருந்த டாக்டர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து வளவனின் தாயார் கீதா கூறுகையில்,
எனது மகன் பிழைக்கமாட்டான் என்று டாக்டர்கள் கூறினார்கள். எனவே அவனது உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்பவர்களின் வழியே அவனை பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த முயற்சி பயன் இல்லாமல் ஆகிவிட்டது.
அவனது உறுப்புகள் செயல் இழந்து வருவதால், அவனுக்கு பொருத்தப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை எடுத்தால் இறந்து விடுவான் என்று கூறுகிறார்கள்.
அவனை ஊருக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறினால் உயிர் போகாமல் தரமாட்டோம் என்று கூறுகிறார்கள். எனது மகனின் உடலை சேலம் கொண்டு சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யவேண்டும் என்றார் அவர்.
பெற்றோர்களின் சண்டையால் ஐந்து பேருக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை பறிபோய் விட்டது.












Click it and Unblock the Notifications